• Home
  • ›
  • உள்ளூர் செய்திகள்
  • ›
  • மூதூர் கிழக்கு பத்திரகாளி அம்பாள் ஆலய வைகாசி விசாக வேள்வியும் கலை விழாவும் பக்திப் பரவசத்துடன் நிறைவு!

மூதூர் கிழக்கு பத்திரகாளி அம்பாள் ஆலய வைகாசி விசாக வேள்வியும் கலை விழாவும் பக்திப் பரவசத்துடன் நிறைவு!

திருகோணமலை, மூதூர் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அகம் பூஞ்சோலை ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயத்தின் 16ஆம் ஆண்டு வைகாசி விசாக வேள்வி மகா உற்சவமும், கலை கலாசார பண்பாட்டு விழாவும் பக்திப் பரவசத்துடன் வெகுவிமரிசையாக நடைபெற்று முடிந்துள்ளன. கடந்த வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் திரளான பக்தர்களின் பங்கேற்புடன் இவ்விழா இடம்பெற்றது.

உற்சவத்தின் முக்கிய நிகழ்வாக, பாட்டாளிபுரம் ஸ்ரீ விநாயகர் ஆலயத்தில் இருந்து மங்கள வாத்தியங்கள் முழங்க, பக்தர்கள் புடைசூழ பாரம்பரிய மடைப்பெட்டி ஊர்வலம் பக்திப் பூர்வமாக ஆரம்பமாகி பத்திரகாளி அம்பாள் ஆலயத்தை வந்தடைந்தது. அதனைத் தொடர்ந்து அம்பாளுக்கு விசேட பூசைகளும் அபிஷேகங்களும் இடம்பெற்றன.

ஆலய வளாகத்தில் ஏற்பாட்டுக் குழுத் தலைவர் பொன். சற்சிவானந்தம் தலைமையில் வண்ணமயமான கலை கலாசார பண்பாட்டு விழா நடைபெற்றது. இதில் அப்பகுதி பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர் மன்ற உறுப்பினர்களின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் மேடையேற்றப்பட்டு அனைவரையும் கவர்ந்தன.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்த முக்கிய பிரமுகர்கள்:

  • கலாபூசணம் ப. மதிபாலசிங்கம்
  • கலாபூசணம் இரா. இரத்தினசிங்கம்
  • சுகுமார் ராஜ ஆனந்த்
  • குணபால விஜயரெட்ணம்
  • பு. கருணாகரன் (உதவி கல்விப் பணிப்பாளர்)

கலை நிகழ்ச்சிகளில் திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்களுக்குப் பிரமுகர்களினால் பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டன.

இவ்விழாவின் மிக முக்கிய மற்றும் ஆன்மீகச் சிறப்பம்சமாக சனிக்கிழமை அதிகாலை தீமிதிப்பு உற்சவம் நடைபெற்றது. ஆலய முற்றத்தில் அமைக்கப்பட்டிருந்த பக்தித் தீக்குழியில், திரளான பக்தர்கள் “ஆரோகரா” பக்தி முழக்கங்களுடன் இறங்கி, தங்களது நேர்த்திக்கடன்களைச் செலுத்தி அம்பாளின் அருளைப் பெற்றுக்கொண்டனர்.

ஆலயத் திருப்பணிகளில் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட தொண்டர்கள் மற்றும் பூசகர்கள் கௌரவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 16ஆம் ஆண்டு வைகாசி விசாக வேள்வி மகா உற்சவம் இனிதே நிறைவு பெற்றது.

Share the Post:

Related Posts