• Home
  • ›
  • உள்ளூர் செய்திகள்
  • ›
  • மண்முனைப் பற்று வவுனதீவில் “நிலைபெற்றுத் திட்டம்”: பன்சேனை அடைச்சகல் பகுதியில் புதிய மதகு அமைக்க அடிக்கல் நட்டப்பட்டது!

மண்முனைப் பற்று வவுனதீவில் “நிலைபெற்றுத் திட்டம்”: பன்சேனை அடைச்சகல் பகுதியில் புதிய மதகு அமைக்க அடிக்கல் நட்டப்பட்டது!

பொதுநிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் நிதியொதுக்கீட்டில், உள்ளூராட்சி அமைப்புகளுக்குட்பட்ட சிறிய பாலங்களை மேம்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படும் “நிலைபெற்றுத் திட்டம்” எனும் விசேட திட்டத்தின் கீழ், புதிய மதகு அமைப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு நேற்று (14.07.2026) செவ்வாய்க்கிழமை பன்சேனை கிராமத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

மண்முனைப் பற்று வவுனதீவு பிரதேச சபையின் நேரடிச் செயற்படுத்தலில், பன்சேனை கிராமத்தின் அடைச்சகல் பகுதியில் இப்பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.

இப்பகுதியில் முறையான மதகு ஒன்று இல்லாத காரணத்தினால், மழைக்காலங்களிலும் ஏனைய நாட்களிலும் போக்குவரத்துச் செய்வதில் கிராம மக்கள் நீண்டகாலமாகப் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வந்தனர். மக்கள் எதிர்நோக்கும் இந்த அசௌகரியங்களை நீக்கும் பொருட்டு, இப்பகுதி மக்களின் முக்கிய கோரிக்கையாக முன்வைக்கப்பட்டிருந்த இவ் வேலைத்திட்டம் தற்போது உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இவ் அடிக்கல் நடும் நிகழ்வில் முதன்மை விருந்தினராக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இளையதம்பி சிறிநாத் கலந்து சிறப்பித்தார்.

மேலும், இந்நிகழ்வில்:

  • மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான ஞானமுத்து சிறிநேசன் மற்றும் கந்தசாமி பிரபு
  • மண்முனைப் பற்று வவுனதீவுப் பிரதேச சபைத் தவிசாளர், உறுப்பினர்கள் மற்றும் செயலாளர்
  • அரச அதிகாரிகள்
  • கிராம மட்ட மற்றும் சமூக மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள்
  • பெருந்திரளான பொதுமக்கள்

எனப் பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

இவ் வேலைத்திட்டம் நிறைவடையும் பட்சத்தில், பன்சேனை மற்றும் அடைச்சகல் பகுதி மக்களின் நீண்டகாலப் போக்குவரத்துப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு கிட்டும் என பிரதேச மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

Share the Post: