• Home
  • ›
  • உள்ளூர் செய்திகள்
  • ›
  • நெல் கொள்வனவு: அரசாங்கத்தின் உத்தரவாத விலைக்கு ஆலை உரிமையாளர்கள் கொள்கை அளவில் சம்மதம்!

நெல் கொள்வனவு: அரசாங்கத்தின் உத்தரவாத விலைக்கு ஆலை உரிமையாளர்கள் கொள்கை அளவில் சம்மதம்!

அரசாங்கத்தினால் நிர்ணயிக்கப்பட்டுள்ள புதிய உத்தரவாத விலைகளின் கீழ், விவசாயிகளிடமிருந்து நெல்லைக் கொள்வனவு செய்வதற்கு நாட்டின் அனைத்து அரிசி ஆலை உரிமையாளர்களும் கொள்கை அளவில் தமது இணக்கப்பாட்டைத் தெரிவித்துள்ளனர்.

வர்த்தகம், வாணிபம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்கவிற்கும், மில் உரிமையாளர்களுக்கும் இடையில் இடம்பெற்ற விஷேட கலந்துரையாடலின் போதே இந்த முக்கிய தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

இந்தக் கலந்துரையாடலின் போது, பின்வரும் விலைகளின் அடிப்படையில் நெல்லைக் கொள்வனவு செய்வதில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள் மற்றும் சாத்தியக்கூறுகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது:

  • நாடு நெல் (1 கிலோகிராம்): ரூ. 120
  • சம்பா நெல் (1 கிலோகிராம்): ரூ. 130
  • கீரி சம்பா நெல் (1 கிலோகிராம்): ரூ. 140

இக்கலந்துரையாடல் குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அமைச்சர் வசந்த சமரசிங்க, அரசாங்கத்தின் இந்த வேலைத்திட்டத்திற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்க ஆலை உரிமையாளர்கள் தயாராக இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இந்த உத்தரவாத விலை திட்டத்தை முறையான வகையில் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்த முடிந்தால், அதன் நேரடிப் பலனாக சந்தையில் அரிசியின் சில்லறை விலையைக் குறைப்பதற்கும் ஆலை உரிமையாளர்கள் உடன்பாடு தெரிவித்துள்ளதாக அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.

இதன் மூலம் விவசாயிகளுக்கு நியாயமான விலையும், நுகர்வோருக்கு குறைந்த விலையில் அரிசியும் கிடைப்பது உறுதிசெய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share the Post: