• Home
  • ›
  • உள்ளூர் செய்திகள்
  • ›
  • நிலக்கரி கொள்முதல் முறைகேடு: நாளை முதல் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சிப்பதிவு ஆரம்பம்! முதலாவதாக அமைச்சின் செயலாளர் அழைப்பு

நிலக்கரி கொள்முதல் முறைகேடு: நாளை முதல் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சிப்பதிவு ஆரம்பம்! முதலாவதாக அமைச்சின் செயலாளர் அழைப்பு

சர்ச்சைக்குரிய நிலக்கரி கொள்முதல் முறைகேடுகள் குறித்து விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு, நாளை திங்கட்கிழமை (06) காலை முதல் தனது சாட்சியப் பதிவுப் பணிகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கவுள்ளது.

இந்த ஆணைக்குழுவின் முன்னிலையில் முதலாவதாகச் சாட்சியமளிப்பதற்காக, தற்போதைய எரிசக்தி அமைச்சின் செயலாளர் ஜி. எம். ஆர். டி. அபோன்சோ அழைக்கப்பட்டுள்ளார்.

செயலாளரின் சாட்சியப் பதிவைத் தொடர்ந்து அடுத்தகட்டமாகப் பின்வரும் தரப்பினரும் ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்க அழைக்கப்பட்டுள்ளனர்:

  • எரிசக்தி அமைச்சின் கொள்முதல் குழு உறுப்பினர்கள்.
  • தேசிய கொள்முதல் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள்.
  • லக்விஜய (நுரைச்சோலை) நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர்.

சாதாரண நடைமுறைகளின்படி, ஆணைக்குழு முதற்கட்டமாக சாட்சிகளிடமிருந்து சாட்சியங்களை விசாரணை செய்யும். அதன் பின்னர், முறைகேடுகளுடன் தொடர்புடைய குறிப்பிட்ட நபர்கள் அடையாளம் காணப்பட்டதும், அவர்கள் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படுவர். சாட்சியமளிக்க வருபவர்கள் தங்களைப் பிரதிநிதித்துவப்படுத்த சட்டத்தரணிகளை அழைத்து வரவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர்களிடம் தீவிர விசாரணை:

ஆணைக்குழுவின் விசாரணைப் பிரிவினரால் இதுவரை 100-க்கும் மேற்பட்ட நபர்களிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அவர்களில் முன்னாள் எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடியிடம் இரண்டு நாட்களில் சுமார் 6 மணித்தியாலங்கள் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. அத்துடன், மற்றொரு முன்னாள் எரிசக்தி அமைச்சரான பாட்டலி சம்பிக்க ரணவக்கவிடமும் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த விசேட ஆணைக்குழுவிற்கு இதுவரை மொத்தம் 28 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதுடன், ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் அண்மையில் லக்விஜய நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்திற்கு நேரடி அவதானிப்பு விஜயம் ஒன்றையும் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share the Post: