கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடைபெற்று வரும் 12வது வருடாந்த மாஸ்டர் மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்-2026 (12th Annual Master Athletic Championship-2026) போட்டிகளில், நிந்தவூரைச் சேர்ந்த 63 வயதான அல்-ஹாஜ் ஐ.எல்.எம். இப்ராஹிம் (கபூர் சேர்) இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார்.
இம்மாதம் 23 மற்றும் 24 ஆகிய திகதிகளில் தேசிய மட்டத்தில் நடைபெற்ற இப்போட்டிகளில், 60 முதல் 64 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான பிரிவிலேயே இவர் இந்த வெற்றிகளைப் பதிவு செய்துள்ளார்.
கல்முனை கல்வி வலயத்தின் முன்னாள் ஓய்வுபெற்ற உடற்கல்வி ஆலோசகரான இவர், 300 மீற்றர் தடைதாண்டல் (300M Hurdles) மற்றும் 200 மீற்றர் ஓட்டப் பந்தயம் (200M) ஆகிய இரண்டு தடகள நிகழ்ச்சிகளிலும் திறமையாகப் போட்டியிட்டு 3ஆம் இடங்களைப் பெற்று, இரண்டு வெண்கலப் பதக்கங்களைத் தனதாக்கிக் கொண்டார்.
தனது 63வது வயதிலும் தளராத உடற்தகுதியுடனும் விளையாட்டு ஆர்வத்துடனும் களமிறங்கி, பதக்கங்களை வென்று காட்டியுள்ள ஐ.எல்.எம். இப்ராஹிம் (கபூர் சேர்), தனது சொந்த ஊரான நிந்தவூர் பிரதேசத்திற்கும் ஒட்டுமொத்த கிழக்கு மாகாணத்திற்கும் பெரும் பெருமையைத் தேடித்தந்துள்ளார்.
இவரின் இந்த வரலாற்றுச் சாதனைக்கு பிராந்திய விளையாட்டு ரசிகர்களும் சமூக ஆர்வலர்களும் தமது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.
நிந்தவூர் டுடே வாழ்த்துவதில் பெருமிதம் கொள்கிறது




