மட்டக்களப்பு மாவட்டம், கோறளைப்பற்று வடக்கு (வாகரை) பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட எல்லைக் கிராமமான தோணிதாண்டமடுப் பகுதியின் நிர்வாக எல்லைச் சிக்கல்கள் தொடர்பில், பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் இன்று (11.09.2026) விசேட உயர்மட்டக் கலந்துரையாடலொன்று நடைபெற்றது.
கடந்த 06.09.2026 அன்று பொலன்னறுவை மாவட்டத்தைச் சேர்ந்த வன ஜீவராசிகள் அதிகாரிகளால் தோணிதாண்டமடு பகுதி மக்களுக்கு ஏற்பட்ட நெருக்கடிகள் குறித்து, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இ.சிறிநாத், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றதை அடுத்து இச்சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது.
தோணிதாண்டமடுக் கிராமம் பிரதேச செயலகம், கமநல சேவைகள் திணைக்களம் மற்றும் பொலிஸ் அதிகாரப் பிரிவுகளின் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்ட எல்லைக்குள் அமைந்துள்ளது. இருப்பினும், வன ஜீவராசிகள் திணைக்களத்தின் அதிகார எல்லை பொலன்னறுவை மாவட்டத்தின் கீழ் இருப்பதால், அப்பகுதி மக்கள் விவசாயம் உள்ளிட்ட வாழ்வாதார நடவடிக்கைகளில் தொடர்ச்சியாகப் பெரும் அசௌகரியங்களையும் சில அதிகாரிகளின் நெருக்கடிகளையும் எதிர்கொண்டு வருகின்றனர்.
இப் பிரச்சினைகளைக் கேட்டறிந்த சுற்றாடல் அமைச்சர் வைத்தியர் தம்மிக்க படபெந்தி, இது குறித்து திணைக்கள மட்டத்தில் விரிவாக ஆராய்ந்து தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். மேலும், வரவிருக்கும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் இப் பிரச்சினையை முதன்மைப்படுத்தி, குறித்த கிராமத்தின் வன ஜீவராசிகள் பரிபாலன அதிகாரத்தை மட்டக்களப்பு மாவட்டத்திற்குப் பெற்றுத் தருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
இவ்விசேட கலந்துரையாடலில் சுற்றாடல் அமைச்சர் கௌரவ வைத்தியர் தம்மிக்க படபெந்தி, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர், சுற்றாடல் பிரதி அமைச்சர் கௌரவ அன்ரன் ஜெயக்கொடி மற்றும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.





