ஹஸ்பர் ஏ.எச்-
இந்திய உயர்ஸ்தானிகரகம் மற்றும் ஹம்பாந்தோட்டையிலுள்ள இந்திய துணைத் தூதரகம், மாத்தறை மிடெல்லவெல புராண விகாரையுடன் இணைந்து, தேசிய வேசாக் விழா 2026-இன் ஒரு பகுதியாக ‘இந்தியாவின் புத்த பாரம்பரியம்’ என்ற தலைப்பில் சிறப்பு புகைப்படக் கண்காட்சியை ஏற்பாடு செய்தன.
- இந்தக் கண்காட்சியை இலங்கை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அவர்கள், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா அவர்களுடன் இணைந்து தேசிய வேசாக் விழாவின் தொடக்க விழாவில் திறந்து வைத்தார். இந்நிகழ்வில் விகாரையின் பிரதம பீடாதிபதி வணக்கத்திற்குரிய ஹக்மண ஞானவிமல நாயக்க தேரர்; புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் டாக்டர் ஹினிதும சுனில் செனெவி; தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி; பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன; மகளிர் மற்றும் சிறுவர்கள் அலுவல்கள் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ்; இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள்; தென் மாகாண ஆளுநர் பேராசிரியர் சுசிரிபால மனவடு; மூத்த அரச அதிகாரிகள் மற்றும் பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
- இந்தக் கண்காட்சி இந்தியாவின் வளமான புத்த பாரம்பரியத்தை கொண்டாடுவதுடன், பகவான் புத்தரின் வாழ்க்கை மற்றும் போதனைகளுடன் தொடர்புடைய ஆன்மீக மற்றும் கலாசார மரபுகளையும் வெளிப்படுத்துகிறது. இதில் இந்தியா முழுவதும் உள்ள புனித புத்த தலங்கள் மற்றும் நினைவுச்சின்னங்களின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக, பகவான் புத்தரின் வாழ்க்கையுடன் தொடர்புடைய இடங்கள், பண்டைய விகாரைகள், ஸ்தூபிகள், தொல்பொருள் சின்னங்கள் மற்றும் யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளங்கள் ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
- இக்கண்காட்சி 2026 மே 27 முதல் ஜூன் 2 வரை பொதுமக்களுக்காக திறந்து வைக்கப்படும்.
- இக்கண்காட்சி, இந்திய அரசாங்கம், இந்திய உயர்ஸ்தானிகரகம் மற்றும் இலங்கையிலுள்ள இந்திய துணைத் தூதரகங்கள் ஆகியவை இரு நாடுகளுக்கும் இடையிலான தனித்துவமான பகிரப்பட்ட புத்த பாரம்பரியத்தை மேம்படுத்த மேற்கொண்டு வரும் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாகும்.
- இவ்வருடத்தின் தொடக்கத்தில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் 2025 ஏப்ரல் மாத அரசுமுறை விஜயத்தின் போது அறிவித்தபடி, குஜராத்தின் தேவ்நிமோரியிலிருந்து கொண்டுவரப்பட்ட புனித அவயவங்களின் சிறப்பு பொதுக் காட்சியில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பக்தர்கள் வழிபட்டனர். இதற்கு முன்பும் சார்நாத் மற்றும் கபிலவஸ்து ஆகிய இடங்களிலிருந்தும் புனித அவயவங்கள் இலங்கைக்கு பொதுக் காட்சிக்காக கொண்டு வரப்பட்டிருந்தன.
2020 செப்டம்பர் மாதத்தில், இரு நாடுகளுக்குமிடையிலான புத்த உறவுகளை வலுப்படுத்த இந்திய அரசாங்கம் 15 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவியை அறிவித்தது. அந்த உதவித் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் முக்கியமான திட்டங்களில் ஒன்று, சூரிய மின்சக்தி அமைப்புகளை நிறுவுவதன் மூலம் தீவு முழுவதும் உள்ள சுமார் 9000 புத்த விகாரைகள் மற்றும் பிரிவேணாக்களுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டமாகும். மேலும், 2025 ஏப்ரலில் இந்திய பிரதமரின் அரசுமுறை விஜயத்தின் போது, அனுராதபுரம் புனித நகரத் திட்டத்திற்கும் இந்தியாவின் உதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.







