திருச்சி: திருச்சி மத்திய சிறை வளாகத்திற்குள் அமைந்துள்ள சிறப்பு முகாமில் தங்கியுள்ள இலங்கைத் தமிழர்கள் சிலர், மரங்களின் மீது ஏறி நின்றவாறு தீவிர போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பும் பதற்றமும் நிலவியது.
நீண்ட காலமாகத் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டுள்ள தங்களை உடனடி விடுதலை செய்ய வேண்டும் அல்லது தாய்நாட்டிற்குத் திருப்பி அனுப்ப வேண்டும் என வலியுறுத்தியும், முகாமின் அடிப்படை வசதிகள் மற்றும் வழக்கு விசாரணைகளின் காலதாமதத்தைக் கண்டித்தும் இவர்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டங்களையும் முன்னெடுத்து வந்தனர்.
இந்நிலையில், தங்கள் கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு வழங்கப்படவில்லை எனக் கூறி, அகதிகள் சிலர் திடீரென முகாம் வளாகத்திலுள்ள உயரமான மரங்கள் மீது ஏறி தற்கொலை அச்சுறுத்தல் விடுத்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் பொலிஸார், மரத்தின் மீது இருந்தவர்களைப் பேச்சுவார்த்தை மூலம் பாதுகாப்பாகக் கீழே இறக்க தீவிர முயற்சிகளை மேற்கொண்டனர். இச்சம்பவத்தால் திருச்சி சிறப்பு முகாம் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுப் பதற்றமான சூழல் நிலவுகிறது.




