• Home
  • உள்ளூர் செய்திகள்
  • திருகோணமலை மாவட்ட மாணவர்களுக்கான இலவச 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் வழிகாட்டல் நிகழ்ச்சி 

திருகோணமலை மாவட்ட மாணவர்களுக்கான இலவச 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் வழிகாட்டல் நிகழ்ச்சி 

ஹஸ்பர் ஏ.எச்-

ஜெயக்குமரன்ஸ் குளோபல் பவுண்டேசன்(Jeyakumaran’s Global Foundation) ஏற்பாட்டில், திருகோணமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களின் பங்கேற்புடன் இலவச 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் வழிகாட்டல் நிகழ்ச்சி இன்று(26) திருகோணமலை தி/சிறீ விபுலானந்தா கல்லூரி மண்டபத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது.

காலை 8.00 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை நடைபெற்ற இந்நிகழ்வில், அனுபவமிக்க கல்வியாளர்கள் மற்றும் வளவாளர்கள் மாணவர்களுக்கு புலமைப்பரிசில் பரீட்சைக்கான பாடவிளக்கம், வினாத்தாள் அணுகுமுறை, நேர முகாமைத்துவம், கற்றல் உத்திகள் மற்றும் ஊக்கமளிக்கும் வழிகாட்டல்களை வழங்கினர்.முற்றிலும் இலவசமான குறித்த கருத்தரங்கில் சுமார் 200 மாணவர்களுக்கான இலவச வினா விடைகள் அடங்கிய கற்கைக்கான புத்தகங்களும் வழங்கி வைக்கப்பட்டன.”கல்விக்கு கை கொடுப்போம்”எனும் தொனிப்பொருளில் குறித்த இலவச கருத்தரங்கு இடம்பெற்றது.

பொருளாதாரக் குறைபாடுகள் காரணமாக மேலதிக கல்வி வழிகாட்டல்களைப் பெற முடியாத மாணவர்களுக்கு சமமான கல்வி வாய்ப்பை உருவாக்கும் நோக்கில் இந்த நிகழ்ச்சி முற்றிலும் இலவசமாக நடத்தப்பட்டது. மாணவர்களும் பெற்றோர்களும் இந்த முயற்சியை பெரிதும் பாராட்டி, இத்தகைய நிகழ்வுகள் தொடர்ச்சியாக நடைபெற வேண்டும் என்ற விருப்பத்தையும் தெரிவித்தனர்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய Jeyakumaran’s Global Foundation தலைவரும் இலங்கை தமிழ் அரசு கட்சியின் உறுப்பினருமான  குமார் ஜெயக்குமரன் MBA, BSc (Hons) அவர்கள் தெரிவித்ததாவது:

“கல்வியே சமூக முன்னேற்றத்தின் அடித்தளம். ஒரு மாணவனின் எதிர்காலத்தில் நாம் செய்யும் முதலீடு, ஒரு குடும்பத்தின் எதிர்காலத்தையும், ஒரு மாவட்டத்தின் எதிர்காலத்தையும் மாற்றும். பொருளாதார வசதி இல்லாததால் எந்த ஒரு மாணவரின் கனவும் தடைபடக் கூடாது என்பதே எங்களின் உறுதியான நோக்கமாகும். இதுபோன்ற கல்வி, இளைஞர் மேம்பாடு, சமூக நலன் மற்றும் மனிதநேய சேவைகளை மையமாகக் கொண்ட பல இலவச திட்டங்களையும் நிகழ்ச்சிகளையும் திருகோணமலை மாவட்டத்தின் அனைத்து பிரதேசங்களிலும் தொடர்ச்சியாக முன்னெடுத்து, எமது மாவட்டத்தின் மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கும், சமூகத்தின் நிலையான வளர்ச்சிக்கும் எமது அறக்கட்டளை அர்ப்பணிப்புடன் செயல்படும்.”

இந்த நிகழ்ச்சி வெற்றிகரமாக நடைபெற ஒத்துழைப்பு வழங்கிய பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள், தன்னார்வலர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆதரவளித்த அனைவருக்கும் Jeyakumaran’s Global Foundation தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.

Jeyakumaran’s Global Foundation எதிர்காலத்திலும் திருகோணமலை மாவட்டம் முழுவதும் கல்வி, இளைஞர் திறன் மேம்பாடு, சமூக நலன், மனிதாபிமான சேவைகள் மற்றும் சமூக முன்னேற்றத்திற்கான பல்வேறு இலவச திட்டங்களை நடைமுறைப்படுத்தி, அனைத்து தரப்பு மக்களுக்கும் பயனளிக்கும் பணிகளை தொடர்ச்சியாக முன்னெடுக்க உறுதியளிக்கிறது.

“கல்வியின் மூலம் திருகோணமலை மாவட்டத்தின் எதிர்காலத்தை ஒன்றிணைந்து கட்டியெழுப்புவோம்.”

இதில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட உப தலைவரும் தம்பலகாமம் பிரதேச சபையின் உப தவிசாளருமான வி.விஜயகுமார் உட்பட மலரும் கலந்து கொண்டனர்.

Share the Post: