• Home
  • ›
  • உள்ளூர் செய்திகள்
  • ›
  • திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு கதிரவேலு சண்முகம் குகதாசன் அவர்கள் 2026/06/ 09 ஆம் நாளான இன்று நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை.

திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு கதிரவேலு சண்முகம் குகதாசன் அவர்கள் 2026/06/ 09 ஆம் நாளான இன்று நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை.

மாண்புமிகு அவைத் தலைவர் அவர்களே, முத்திரைத்தீர்வைச் சிறப்பு ஏற்பாடுகள் சட்டம், துறைமுகங்கள் மற்றும் வானூர்தித் தள மேம்பாட்டு வரிச் சட்டம் (PAL), ஆயத்தீர்வை சிறப்பு ஏற்பாடுகள் சட்டம், பெறுமதி சேர் வரிச் சட்டம் ஆகியவற்றின் கீழ் முன்வைக்கப் பட்டுள்ள புதிய கட்டளைகளுக்கு ஒப்புதல் அளிப்பது தொடர்பான, எனது கருத்துகளை  இந்த அவையில் எடுத்துரைக்க விழைகின்றேன்.

முதலாவதாக; 2026 பெப்ரவரி 24 ஆம் நாளிட்ட 2477/22 ஆம் எண் கொண்ட சிறப்பு அரசிதழில் பிரசுரிக்கப்பட்ட, முத்திரைத் தீர்வை சிறப்பு ஏற்பாடுகள் சட்டத்தின் 05 ஆம் பிரிவின் கீழான கட்டளையானது;

இயற்கை பேரிடரினால் பாதிக்கப்பட்டோருக்கு அரசால் வழங்கப்படும் கொடுப்பனவுகளுக்கான முத்திரைத் தீர்வையிலிருந்து விலக்களிக்கிறது. இந்த நடவடிக்கை, 2025 நவம்பரில் ‘டிட்வா’ பேரிடரால் ஏற்பட்ட மாந்தநேய நெருக்கடிக்கான நேரடி சட்டவாக்க விடையாகும்.

அரசின் மீட்பு மானியங்கள், வீட்டு வாடகை கொடுப்பனவுகள் மற்றும் வாழ்வாதார இழப்பீடுகள் மீதான முத்திரைத் தீர்வையை நீக்குவதன் மூலம், இந்த உதவித்தொகை எவ்வித வரித் தடைகளுமின்றி பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சென்றடைவதை அரசு உறுதி செய்கிறது.

இரண்டாவதாக; 2026 மார்ச் 03 ஆம் நாளிட்ட 2478/05 ஆம் எண் கொண்ட சிறப்பு அரசிதழில் பிரசுரிக்கப்பட்ட, துறைமுகங்கள் மற்றும் வானூர்தித் தள மேம்பாட்டு வரிச் சட்டத்தின் 3(3) பிரிவின் கீழான கட்டளையானது; இரண்டு அங்குலத்திற்கும் குறைவான விட்டம் கொண்ட மாழைக் (Metal ) குழாய்கள், வீட்டுப் பயன்பாட்டுக்கான நெகிழ (Plastic) நீர் வழங்கல் குழாய்கள் (taps) மற்றும் தடுக்கிதழ்களுக்கு (valves) 5 வீதமான வரியை அறிமுகப்படுத்துகிறது.

அத்தோடு, இச்சட்டத்தின் நான்காவது அட்டவணையின் கீழ் புதிய விலக்களிப்புகளையும் வழங்குகிறது.

இந்த விலக்களிப்பானது; முதன்மையான நீர் வழங்கல் கட்டமைப்பு மற்றும் சுகாதார உதிரிப்பாகங்களின் இறக்குமதிச் செலவைக் குறைத்து,வீட்டு மறுசீரமைப்புப் பணிகளுக்கு ஆதரவளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

மூன்றாவதாக ; 2026 மார்ச் 03 ஆம் நாளிட்ட 2478/06 ஆம் எண் கொண்ட சிறப்பு அரசிதழில் பிரசுரிக்கப்பட்ட, 1989 ஆம் ஆண்டின் 13 ஆம் எண் கொண்ட ஆயத்தீர்வை சிறப்பு ஏற்பாடுகள் சட்டத்தின் 3 ஆம் பிரிவின் கீழான கட்டளையானது; வீட்டு பயன்பாட்டு கருவிகள் மற்றும் சலவை எந்திரங்களுக்கு (washing machines) 25 வீத ஆயத் தீர்வையை விதிக்கிறது.

இந்த நடவடிக்கையானது; மோட்டார் வாகனங்கள், நிலநெய், புகையிலை ,மதுபானங்கள் முதலியவற்றுக்கு மரபுவழியாக விதிக்கப்பட்டு வந்த சிறப்பு ஆயத்தீர்வை வலையமைப்பிற்குள், வீட்டுப் பயன்பாட்டுப் பொருட்களையும் கொண்டு வருகின்றது. இது நடுத்தர வர்க்க நுகர்விலிருந்து நேரடி வருவாயை ஈட்டுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

நான்காவதாக ; 2026 மார்ச் 03 ஆம் நாளிட்ட 2478/07 ஆம் எண் கொண்ட சிறப்பு அரசிதழில் பிரசுரிக்கப்பட்ட, பெறுமதி சேர் வரிச் சட்டத்தின் 2A பிரிவின் கீழான கட்டளையானது, துணி இறக்குமதியை சுழிய வீத வரியாக (zero-rated) அறிவித்திருந்த 2018 நவம்பர் 01 ஆம் நாளிட்ட 2095/20 ஆம் எண் கொண்ட சிறப்பு அரசிதழ் அறிவித்தலை நீக்குகின்றது.

இக்கட்டளையின் விளைவாக, துணி இறக்குமதி மற்றும் உள்ளூர் வழங்கல் ஆகியவற்றுக்கு 18 வீத நிலையான பெறுமதி சேர் வரி விதிக்கப்படுகிறது. இதன் மூலம் ஆடைத் துறையை நடுநிலையான வரிச் சூழலை நோக்கி நகர்த்துகிறது.

இலங்கையின் வருவாய்க் கொள்கையானது கடந்த இரு பதிற்றாண்டுகளாக, வீழ்ச்சியடைந்து வரும் உள்நாட்டு வரி வருவாயை ஈடுசெய்வதற்கும் உள்ளூர் தொழில் துறைகளைப் பாதுகாப்பதற்கும் ஆன கருவியாக செயற்பட்டது.

இப்பொழுது; முன்மொழியப்பட்ட சட்டவாக்கக் கட்டளைகள், கட்டமைப்பு அடிப்படையிலான   நன்மைகளைக் கொண்டிருந்த பொழுதிலும் , தொழிற் சங்கங்கள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அமைப்புகளிடமிருந்து கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளன.

முதலாவதாக; இலங்கையின் இரண்டாவது பெரிய வெளிநாட்டு நாணய ஈட்டல் துறையான ஆடை ஏற்றுமதித் துறையின் (apparel export sector) நடைமுறை மூலதனத்தில் (working capital) ஏற்படும் பாதிப்பை மையமாகக் கொண்டுள்ளது.

இலங்கையில் வலுவான உள்நாட்டு துணி உற்பத்தி தளம் இன்மையால் ஆடை உற்பத்தியாளர் தமது மூலப்பொருட்களில் பெரும்பகுதியை இறக்குமதி செய்ய வேண்டியுள்ளது.

பழைய சட்டத்தின் கீழ் துணி இறக்குமதிக்கு பெறுமதி சேர் வரி வரியிலிருந்து விலக்கு அளிக்கப் பட்டிருந்தது. புதிய கட்டளையின் கீழ், துணி இறக்குமதிக்கு இறக்குமதி புள்ளியில் 18 வீத நிலையான பெறுமதி சேர் வரி விதிக்கப்படுகிறது.

இறக்குமதி தீர்வை (CESS) நீக்கப்பட்டமை ஒட்டுமொத்த வரித் தடையைக் குறைத்தாலும், முன்கூட்டியே 18 வீத பெறுமதி சேர் வரி செலுத்த வேண்டியிருப்பது ஏற்றுமதியாளர்களின் பணப்புழக்கத்தை (cash flow) கடுமையாகப் பாதிக்கும்.

இரண்டாவதாக; இறக்குமதி சார்ந்த இணைப்புக் வரிகளிலிருந்து பெறுமதி சேர் வரி மற்றும் ஆயத்தீர்வைகள் முதலிய பரந்த நுகர்வு வரிகளுக்கு மாறுவது, குறைந்த மற்றும் நடுத்தர வருமானக் குடும்பங்களை அதிகமாகப் பாதிக்கிறது. இது அரசின் நிதி உறுதிப் படுத்தல் வழிமுறையின் பின்னடைவுத் தன்மை (regressive nature) என விமர்சிக்கப் படுகின்றது.

2026 ஏப்ரல் 29 அன்று வெளியிடப்பட்ட பெறுமதி சேர் வரி திருத்தச் சட்டமானது; ஆண்டுக்கான பெறுமதி சேர் வரி செலுத்துவோர் வரம்பை 60 மில்லியன் ரூபாவிலிருந்து 36 மில்லியன் ரூபாவாகக் குறைக்கிறது. இது ஆயிரக்கணக்கான சிறு மற்றும் நடுத்தர தொழில்களை (MSMEs) வரி வலையமைப்புக்குள் கொண்டு வருகிறது.

அதிக வருமானம் ஈட்டுபவர்களிடமிருந்து நேரடி வரி அறவிடுவது நலிவாக இருக்கும் நிலையில், அரசு மறைமுக வரிகளை அதிகமாக நம்பியிருப்பதாக விமர்சகர்கள் வாதிடுகின்றனர்.

பொருண்மிய மந்தநிலையின் பொழுது; புதிய நுகர்வு வரிகளை விதிப்பது பொதுமக்களிடையே சீர்திருத்தங்கள் மீதான சோர்வை ஏற்படுத்தி மீட்புப் பணிகளைச் சிக்கலாக்கும் இடரைக் கொண்டுள்ளது.

வருவாய் ஈட்டல், பொருண்மியப் போட்டி, சமூக நீதி ஆகியவற்றுக்கு இடையேயான முரண்பாடுகளைக் களைவதற்குப் பின்வரும் பரிந்துரைகளை நான் முன்வைக்க விரும்புகின்றேன்.

முதலாவதாக ; ஆடை ஏற்றுமதித் துறையின் நடைமுறை மூலதனப் பாதிப்பைக் குறைக்க, அரசு விரைவான பெறுமதி சேர் வரி மீளளிப்பு முறையை நிறுவ வேண்டும்.

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் ஆனது ;வருவாய் நிருவாக மேலாண்மை தகவல் அமைப்பு ( RAMIS) மற்றும் தேசிய மின்-விலைப்பட்டியல் முறையைப் பயன்படுத்தி, உள்ளீட்டு வரி கோரிக்கைகளைத் தானியக்கமாக்கி, 14 வணிக நாட்களுக்குள் மீளளிப்புகளை வழங்க வேண்டும்.

இரண்டாவதாக ; நுகர்வு வரிகளின் சுமையைக் குறைக்க, அரசு நேரடி வரி அறவீட்டுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். வீட்டு பயன்பாட்டுப் பொருட்கள் மீது நுகர்வு வரிகளை விதிப்பதற்குப் மாற்றாக, தனியாள் மற்றும் நிறுவன வருமான வரி அறவீட்டை அதிகரிக்க வேண்டும்.

அனைத்து தொழில்சார் துறைகளிலும் வரி செலுத்துவோர் அடையாள எண்ணை (TIN) கட்டாயமாக்குவதன் மூலம் அதிக வருமானம் ஈட்டுபவர்களை வரி வரம்பிற்குள் கொண்டு வந்து, நடுத்தர காலத்தில் நிலையான பெறுமதி சேர் வரி வீதத்தைக் குறைக்க முடியும்.

மூன்றவதாக ; 36 மில்லியன் ரூபா பெறுமதி சேர் வரி வரம்பிற்கு மாறும் செயல்முறை கவனமாக நிருவகிக்கப்பட வேண்டும். புதிதாகப் பதிவுசெய்யும் சிறு வணிகங்களுக்கு உள்நாட்டு இறைவரித் திணைக்களம் (IRD) எளிமைப் படுத்தப்பட்ட பெறுமதி சேர் வரி தாக்கல் முறைகளையும் சலுகைக் காலத்தையும் வழங்க வேண்டும்.

நான்காவதாக : நுகர்வோர் செலவை அதிகரிக்கும் இறக்குமதி வரிகளுக்குப் மாற்றாக; மின் கட்டண மானியங்கள், தொழில்நுட்ப புதுமை மயமாக்கலுக்கான குறைந்த வட்டிக் கடன் வசதிகள் மற்றும் ஏற்றுமதி உள்கட்டமைப்பு ஆதரவு முதலியவற்றை வழங்கலாம். இது உள்ளூர் நிறுவனங்களின் உலகளாவிய போட்டித்தன்மையை அதிகரிக்க உதவும்.

மாண்புமிகு அவைத் தலைவர் அவர்களே, இன்று இந்த அவையில் முன்வைக்கப்பட்டுள்ள வரி விதிப்பு தொடர்பிலான சட்டவாக்கக் கட்டளைகள் இலங்கையின் பொருண்மிய மீட்சியில் ஒரு முதன்மையான செயற்பாடுகளாகும். இந்த வேளையில்; தமிழ் மெய்யியலார் (Philosopher) திருவள்ளுவர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு; நாடாளும் அரசனுக்கு கூறிய அறிவுரையை இவ்விடத்தில் நினைவூட்ட விரும்புகின்றேன்.

பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம்

சால மிகுந்துப் பெயின்.

அதாவது மயில்தோகை மெதுவான பொருளாயினும் அதனை அளவுக்கு அதிகமாக வண்டியில் ஏற்றினால் வண்டியின் அச்சு முறிந்து விடும் அது போல; வரி செலுத்துவோர் மீது அளவுக்கு அதிகமாக வரிகளை விதித்தால் ஆட்சி முறிந்துவிடக் கூடிய இடர் (அபாயம் ) உண்டு எனக் கூறி எனது உரையை நிறைவு செய்கின்றேன்.

நன்றி

Share the Post: