தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் வருடாந்த பேருந்து கட்டண திருத்தத்திற்கு அமைய, எதிர்வரும் ஜூலை 1 ஆம் திகதி முதல் நாடு தழுவிய ரீதியில் பேருந்து கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் (NTC) தலைவர், பொறியியலாளர் பி.ஏ. சந்திரபால, கட்டண திருத்தத்திற்கான இறுதி கட்ட முன்னேற்பாடுகள் தற்போது தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார்.
பேருந்து கட்டணங்கள் எவ்வளவு சதவீதத்தால் அதிகரிக்கப்படும் என்ற விபரம் இன்னும் உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவில்லை. இது குறித்து விளக்கமளித்த தலைவர்;
“எதிர்வரும் ஜூலை மாதத்திற்கான எரிபொருள் விலை மாற்றத்தைக் கருத்தில் கொண்ட பின்னரே, பேருந்து கட்டண உயர்வு தொடர்பான இறுதி சதவீதங்கள் மற்றும் புதிய கட்டண விபரங்கள் பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும்.” என்று மேலும் தெரிவித்தார்.
ஒவ்வொரு வருடமும் ஜூலை மாதத்தில் மேற்கொள்ளப்படும் வழக்கமான வருடாந்த பேருந்து கட்டண திருத்தத்தின் அங்கமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




