பாறுக் ஷிஹான்
சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள கல்முனை, நற்பிட்டிமுனையைச் சேர்ந்த சிவராசா அனோஜனின் வீட்டிற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிசாத் பதியுதீன் நேற்று (18) நேரில் விஜயம் செய்தார்.
அனோஜனின் தாயார், சகோதரர்கள் மற்றும் குடும்பத்தினரைச் சந்தித்த அவர், குடும்பத்தினருக்குத் தனது ஆறுதலைத் தெரிவித்ததுடன், அனோஜனைப் பாதுகாப்பாக மீட்பதற்கான அனைத்து முயற்சிகளுக்கும் முழுமையான ஆதரவை வழங்குவதாக உறுதியளித்தார். முஸ்லிம் எம்.பி.க்கள் இணைந்து நடவடிக்கைஇச் சந்திப்பின் போது கருத்துத் தெரிவித்த ரிசாத் பதியுதீன்:”அனோஜனுக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனை குறித்த செய்திகள் இலங்கை முஸ்லிம் சமூக மத்தியிலும் பெரும் கவலையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. எனவே, முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மூலமாகச் சவூதி மன்னருக்கு அவசரக் கூட்டு மேன்முறையீடு ஒன்றை அனுப்பத் திட்டமிட்டுள்ளோம்.
அத்துடன், அகில இலங்கை ஜாமிஅதுல் உலமா சபையினூடாகவும் சவூதி அரசாங்கத்திடம் கருணை கோருவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படும்” எனத் தெரிவித்தார். மேலும், தமிழ் அரசியல் தலைவர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சாணக்கியன் இராசமாணிக்கம் மற்றும் மனோ கணேசன் ஆகியோர் தொலைபேசியில் தொடர்புகொண்டு இது குறித்துப் பேசியுள்ளதாகவும், அனோஜனின் உயிரைப் பாதுகாக்க அனைத்துக் கட்சிகளும் இணைந்து கூட்டாகச் செயற்படவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.






