• Home
  • ›
  • உள்ளூர் செய்திகள்
  • ›
  • சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினம்: காத்தான்குடி பிரதேச செயலகத்தில் மாணவர்களின் விழிப்புணர்வு ஓவியக் கண்காட்சி கோலாகலம்!

சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினம்: காத்தான்குடி பிரதேச செயலகத்தில் மாணவர்களின் விழிப்புணர்வு ஓவியக் கண்காட்சி கோலாகலம்!

சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, இளம் தலைமுறையினரிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் காத்தான்குடி பிரதேச செயலகத்தில் இன்று (26) வெள்ளிக்கிழமை மாபெரும் ஓவியக் கண்காட்சி நடைபெற்றது.

காத்தான்குடி பிரதேச செயலாளர் திருமதி நிஹாறா மௌஜூத் தலைமையில் நடைபெற்ற இக்கண்காட்சியில், பிரதேசத்தில் உள்ள பாடசாலை மாணவர்களால் வரையப்பட்ட நூற்றுக்கணக்கான விழிப்புணர்வு ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. போதைப்பொருள் பழக்கத்தின் தீமைகள், அதனால் ஏற்படும் உடல்நலக் கேடுகள் மற்றும் சமூகச் சீரழிவுகள் ஆகியவற்றை மாணவர்கள் தங்களது தூரிகை வழியே உணர்வுபூர்வமாக ஓவியங்களில் வெளிப்படுத்தியிருந்தனர்.

இந்நிகழ்வில், காத்தான்குடி பிரதேச செயலக பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் திருமதி ஹன்சுல் சிஹானா, நிர்வாக உத்தியோகத்தர் எம்.எஸ்.எம்.றஊப், கிராம சேவை நிர்வாக உத்தியோகத்தர் எம்.எம்.எம்.ஜறூப் உட்பட பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு மாணவர்களின் படைப்பாற்றலைப் பாராட்டிச் சிறப்பித்தனர்.

Share the Post: