சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் போக்குவரத்து விதிமுறைகளை மீறி, ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிள்களை செலுத்திய 10 மோட்டார் சைக்கிள்கள் பொலிஸாரினால் அதிரடியாகப் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சம்மாந்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் வழிகாட்டலில், போக்குவரத்துப் பிரிவுப் பொறுப்பதிகாரி உள்ளிட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழுவினர் சம்மாந்துறை நகர்ப் பகுதி மற்றும் பிரதான வீதிகளில் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின் போதே இந்த மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதன்போது, உரிய சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி மோட்டார் சைக்கிள்களை செலுத்தியமை, தலைக்கவசம் அணியாமை, அதிவேகமாகவும் ஆபத்தான முறையிலும் பயணித்தமை மற்றும் வீதிப் போக்குவரத்துப் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டுகளுக்காகவே இவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கைப்பற்றப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் அனைத்தும் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளதுடன், அவற்றின் உரிமையாளர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கும், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.








