கொழும்பு நகரில் அண்மையில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காகவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காகவும் உடனடியாக விசேட அவசரகால செயலணி ஒன்றை அமைக்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க பணிப்புரை விடுத்துள்ளார்.
கொழும்பில் ஒரு மணித்தியாலத்திற்குள் பெய்த 129 மில்லிமீற்றர் அசாதாரண மழைவீழ்ச்சியே இந்தத் திடீர் வெள்ளப்பெருக்கிற்குப் பிரதான காரணியாக அமைந்ததாக அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். தற்போதைய நகர்ப்புற வடிகால் கட்டமைப்பு மணித்தியாலத்திற்கு 30 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியை மட்டுமே தாங்கும் திறன் கொண்டது என்பதால், இந்தத் திடீர் வெள்ளம் ஏற்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற உயர் மட்டக் கலந்துரையாடலின் போது பின்வரும் முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டன:
- அவசரகால செயலணி: கொழும்பு மாநகர சபையின் தலைமையில் முப்படைகள், பொலிஸார் மற்றும் தொடர்புடைய அரச நிறுவனங்களை உள்ளடக்கி விசேட அவசரகால செயலணி உடனடியாக அமைக்கப்படும்.
- வடிகால் அமைப்பு சீரமைப்பு: அடைபட்டுள்ள வடிகால்கள் மற்றும் கால்வாய்களை உடனுக்குடன் சுத்தப்படுத்துவதுடன், நகரின் வடிகால் கட்டமைப்பை மேம்படுத்த குறுகிய, நடுத்தர மற்றும் நீண்டகாலத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும்.
- சட்ட நடவடிக்கை: பாதைகள் மற்றும் கால்வாய்களில் முறையற்ற முறையில் கழிவுகளைக் கொட்டுபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
- அனுமதியற்ற கட்டுமானங்கள் அகற்றம்: வெள்ளப் பெருக்கிற்கு வழிவகுக்கும் அனுமதியற்ற கட்டுமானங்களை அகற்றுவதோடு, அதனால் பாதிக்கப்படும் மக்களுக்கு மாற்று குடியிருப்புகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இக்கலந்துரையாடலில் கொழும்பு மாநகர சபை அதிகாரிகள், முப்படைகளின் தளபதிகள், பொலிஸ் உயர் அதிகாரிகள் மற்றும் துறை சார்ந்த அரச நிறுவனங்களின் பிரதிநிதிகள் பலர் கலந்துகொண்டனர்.






