புருசனும் பெண்டாட்டியுமாகச் சேர்ந்து இந்தளவுக்கு அட்டகாசம் செய்திருக்கிறீங்க!” என்று ஊரே பேசும் அளவுக்கு, கிளிநொச்சியில் தொடர் கொள்ளைகளில் ஈடுபட்டு வந்த இளம் தம்பதியினரை பொலிஸார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
கிளிநொச்சி மாவட்டத்தின் உதயநகர், அம்பாள்குளம், விநாயகபுரம், சாந்தபுரம் மற்றும் கனகாம்பிகைக்குளம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் கடந்த சில வாரங்களாகவே பெரும் அச்சத்தில் இருந்தனர். மக்கள் வேலைகளுக்குச் சென்ற வேளையில், பூட்டப்பட்டிருந்த வீடுகளைக் குறிவைத்து நகைகளும் பெறுமதியான பொருட்களும் மர்மமான முறையில் திருடப்பட்டு வந்தன. ஏதோ ஒரு பெரிய கொள்ளைக் கும்பல்தான் இதன் பின்னணியில் இருக்கும் எனப் பொதுமக்கள் நினைத்திருந்தனர்.
எனினும், பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டன. இதன்போது விநாயகபுரம் பகுதியில் பதுங்கியிருந்த 24 வயதுடைய கணவனையும், 20 வயதுடைய அவரது மனைவியையும் பொலிஸார் அதிரடியாகக் கைது செய்தனர். வெறும் 20, 24 வயதுகளேயான இந்த இளம் தம்பதிதான், 9 வீடுகளின் பூட்டுக்களை உடைத்து பகல் நேரக் கொள்ளைகளில் ஈடுபட்டு வந்த ‘கில்லாடிகள்’ என்பது விசாரணைகளில் அம்பலமாகியுள்ளது.
கைது செய்யப்பட்ட தம்பதியிடமிருந்து பெருமளவிலான பொருட்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன:
- 10 பவுனுக்கும் அதிகமான தங்க நகைகள்
- விலையுயர்ந்த ஸ்மார்ட்போன்கள்
- பெரிய எல்.ஈ.டி (LED) தொலைக்காட்சிகள்
- பல்வேறு பெறுமதியான வீட்டு உபயோகப் பொருட்கள்
சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக குணசேகர மற்றும் அங்கம்மன் ஆகியோரின் ஆலோசனையின் கீழ், பொலிஸ் பரிசோதகர் பஸ்நாயக்க தலைமையிலான குழுவினர் இந்தச் சோதனையை வெற்றிகரமாக நடத்தியுள்ளனர். பொலிஸ் உத்தியோகத்தர் ஏக்கநாயக்க வழங்கிய மிக முக்கியமான தகவலே இந்தத் தம்பதியைச் சிக்க வைக்க உதவியுள்ளது.
ஆடம்பரமாக வாழ்வதற்காகத் திருட்டு தொழிலில் ஈடுபட்ட இந்த இளம் ஜோடி, நாளை கிளிநொச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளது.
பகல் வேளையில் வீடுகளைப் பூட்டிவிட்டுச் செல்லும் போது பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறும், அயலவர்கள் குறித்து அவதானமாக இருக்குமாறும் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.




