• Home
  • ›
  • உள்ளூர் செய்திகள்
  • ›
  • கிண்ணியா ஆயுர்வேத வைத்தியசாலைக்கு 20 மில்லியன் ரூபாயில் புதிய பெண்கள் நோயாளர் விடுதி: அடிக்கல் நாட்டப்பட்டது!

கிண்ணியா ஆயுர்வேத வைத்தியசாலைக்கு 20 மில்லியன் ரூபாயில் புதிய பெண்கள் நோயாளர் விடுதி: அடிக்கல் நாட்டப்பட்டது!

கிண்ணியா மற்றும் அதனைச் சுற்றியுள்ள பிரதேச மக்களின் நீண்டகாலத் தேவையை நிவர்த்தி செய்யும் வகையில், கிண்ணியா மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலையில் புதிய உள்ளக பெண்கள் நோயாளர் விடுதிக்கான (உள்நோயாளி பிரிவு) அடிக்கல் நாட்டு விழா இன்று (ஜூன் 10) காலை 10:00 மணிக்கு மிகச் சிறப்பாக நடைபெற்றது.

கிழக்கு மாகாண விசேட அபிவிருத்தி திட்ட நிதியின் கீழ் (PSDG) இதற்கென 20 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கிண்ணியா மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலையின் பொறுப்பதிகாரி டாக்டர் A.W.M. மாஸாத் அவர்களின் தலைமையில் இந்நிகழ்வு மிகச் சிறப்பாக ஒருங்கிணைக்கப்பட்டது.

இந்த கட்டுமானப் பணிகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கும் அடிக்கல் நாட்டு விழாவில் பல முக்கிய பிரமுகர்கள் சிறப்பு அதிதிகளாகக் கலந்துகொண்டனர்.

இதன்போது கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் H.D.M.G. திசநாயக்க, கிழக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்கள ஆணையாளர் டாக்டர் எம்.ஏ.நபீல், கிண்ணியா பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு இணைப்பாளர் எம். ஈ. எம். ராபிக், கிண்ணியா தள வைத்தியசாலையின் முன்னாள் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் எம். ஏ. |எம். ஜிப்ரி, குறிஞ்சாக்கேணி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி எம்.எச். எம். ரிஸ்வி மற்றும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரொஸான் அக்மீமனவின் பிரத்தியேகச் செயலாளர் சாமர சம்பத் ஆகியோர் கலந்துகொண்டனர்.

மேலும், கிண்ணியா ஜம்மியத்துல் உலமா சபை உறுப்பினர்கள், உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள், பிரஜா சக்தி தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் திரளாகக் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

இந்த புதிய உள்ளக பெண்கள் நோயாளர் விடுதி அமைக்கப்படுவதன் மூலம், கிண்ணியா மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஆயுர்வேத சிகிச்சை பெறும் பெண் நோயாளர்கள் இனிமேல் தங்கி நின்று, தடையின்றி சிறந்த முறையில் சிகிச்சை பெறுவதற்கான வசதிகள் உருவாக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share the Post: