தேசிய வெசாக் வாரத்தை முன்னிட்டு, அதன் முதலாம் நாள் நிகழ்வாக காரைதீவு கண்ணகி இந்து வித்தியாலயத்தில் வெசாக் தின விசேட நிகழ்வுகள் இன்று மிகச் சிறப்பான முறையில் உணர்வுபூர்வமாகக் கொண்டாடப்பட்டன. பாடசாலை அதிபர் எஸ். திருக்குமார் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக காரைதீவு கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஏ. சஞ்சீவன் அவர்கள் கலந்து சிறப்பித்ததுடன், கௌரவ அதிதியாக காரைதீவு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஜெயரட்ண அவர்களும் கலந்து கொண்டனர்.
தேசிய வெசாக் வாரத்தை ஒட்டி, பாடசாலை மாணவர்களினால் மிக நேர்த்தியான முறையில் வெசாக் கூடுகள் செய்யப்பட்டு, அவை பாடசாலை வளாகத்தில் அழகாக அலங்கரிக்கப்பட்டிருந்தன.
நிகழ்வின் சிறப்பம்சமாக, கலந்துகொண்ட மாணவர்களுக்கு காரைதீவு பொலிஸ் நிலையத்தினரால் நீராகாரங்கள் வழங்கி வைக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து, காரைதீவு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியினால் வெசாக் தினத்தின் முக்கியத்துவம் மற்றும் அதன் ஆன்மீகப் பின்னணிகள் குறித்து மாணவர்களுக்கு விசேட விளக்கவுரையும் ஆற்றப்பட்டது.

மத நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் அமைந்த இந்நிகழ்வில் பாடசாலை ஆசிரியர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பயிற்சி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் எனப் பெருந்திரளானோர் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

















