• Home
  • ›
  • உள்ளூர் செய்திகள்
  • ›
  • களுவாஞ்சிக்குடியில் 22 வயது இளம் குடும்பப் பெண் விபரீத முடிவு: அவசரத் திருமணங்களும் மன உறுதியின்மையுமே காரணமா? இளைஞர்களுக்கான விழிப்புணர்வுப் பதிவு

களுவாஞ்சிக்குடியில் 22 வயது இளம் குடும்பப் பெண் விபரீத முடிவு: அவசரத் திருமணங்களும் மன உறுதியின்மையுமே காரணமா? இளைஞர்களுக்கான விழிப்புணர்வுப் பதிவு

மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் 22 வயதுடைய இளம் குடும்பப் பெண் ஒருவர், குடும்பத் தகராறு காரணமாக விபரீத முடிவெடுத்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த வேணுக்கன் சுமேதா (22 வயது) என்ற இளம் பெண்ணே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த சுமேதா, கடந்த 4 வருடங்களுக்கு முன்னர் (தனது 18 ஆவது வயதில்) இளைஞர் ஒருவரைத் திருமணம் செய்து வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில், அவரது கணவர் வேறொரு பெண்ணுடன் நீண்ட நாட்களாகத் தொடர்பில் இருந்தமை கடந்த 19ஆம் திகதி சுமேதாவிற்குத் தெரியவந்துள்ளது.

இது குறித்து தம்பதியினருக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதுடன், அந்தப் பெண்ணையே தான் மறுமணம் செய்யப்போவதாகக் கணவர் கூறியுள்ளார். இதனால் கடுமையான மனவேதனைக்கு உள்ளாகியிருந்த சுமேதா, நேற்று முன்தினம் (20ஆம் திகதி) தனது வீட்டில் விபரீத முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.

தற்காலத்தில் 18, 19 வயதெல்லாங் உணர்ச்சிவசப்பட்டு எடுக்கப்படும் இளவயதுத் திருமண முடிவுகள், வாழ்க்கையின் சவால்களையோ அல்லது ஏமாற்றங்களையோ எதிர்கொள்ளும் மனப்பக்குவமின்மையால் இவ்வாறான சோக முடிவுகளில் போய் முடிகின்றன எனச் சமூக ஆர்வலர்கள் கவலை வெளியிடுகின்றனர்.

யுவதிகள் தங்களது கல்வியை முழுமைப்படுத்தாமல், பொருளாதார ரீதியாகத் தங்கள் காலில் நிற்காமல் அவசரப்பட்டுத் திருமண பந்தத்திற்குள் நுழையும் போது, துரோகங்களை எதிர்கொள்ள முடியாமல் விரக்திக்குத் தள்ளப்படுகின்றனர்.

உங்களை ஏமாற்றிவிட்டு வேறொருவருடன் வாழ நினைக்கும் ஒருவருக்காக, உங்களைப் பெற்றவர்களின் வளர்ப்பையும் உன்னதமான உயிரையும் மாய்ப்பது எந்த விதத்திலும் நியாயமாகாது. நீங்கள் இல்லாத உலகிலும் அந்த ஏமாற்றுக்காரர் தனது அடுத்த வாழ்க்கையை நோக்கிச் சென்றுவிடுவார் என்பதை உணர வேண்டும்.

ஒரு துணையின் ஏமாற்றத்திற்கு அழுது மடிவதை விட, “உன் உதவி இல்லாமல் என்னால் சமூகத்தில் இன்னும் சிறப்பாக வாழ முடியும்” என்று படித்து, வேலைக்குச் சென்று சாதித்துக் காட்டுவதே அவர்களுக்குக் கொடுக்கும் ஆகச்சிறந்த தண்டனையாகும்.

குடும்ப வாழ்வில் ஏமாற்றங்களோ அல்லது மன ரீதியான துன்புறுத்தல்களோ ஏற்படும் பட்சத்தில், தற்கொலைக்கு முயலாமல் விவாகரத்து (Divorce) அல்லது சட்ட ரீதியான பிரிவினூடாகப் புதியதொரு கௌரவமான வாழ்க்கையைத் தொடங்க முன்வர வேண்டும்.

உங்களை மதிக்காத ஒருவருக்காக உயிரை விடுவது முட்டாள்தனமானது. ஏமாற்றங்களை எதிர்கொண்டு தைரியமாக எழுந்து நிற்பதே ஒரு பெண்ணின் உண்மையான பலம் என்பதை இன்றைய இளம் தலைமுறையினர் ஆழமாகப் புரிந்துகொள்ள வேண்டும்.

Share the Post:

Related Posts