தாயக ஊற்று அமைப்பின் ஏற்பாட்டில், அமைப்பின் ஸ்தாபகத் தலைவரும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வைத்தியர் இ.சிறிநாத் அவர்களின் நெறிப்படுத்தலில் மட்டக்களப்பு கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட ஏறாவூர்பற்று கல்விக் கோட்டத்தின் கீழ் உள்ள சித்தாண்டி கிராமத்தில் உள்ள மட்/ககு/சித்தாண்டி இராமகிருஷ்ண மிஷன் வித்தியாலயம், மட்/ககு/உதயன்மூலை விவேகானந்தா வித்தியாலயம், மட்/ககு/சித்தாண்டி சித்திவிநாயகர் வித்தியாலயம், மட்/ககு/சித்தாண்டி அலைமகள் வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள சுமார் 150 மாணவர்களுக்கான வலுவூட்டல் செயலமர்வு 19.07.2026 அன்று வெற்றிகரமாக நடாத்தப்பட்டது.
இவ் வருடம் புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் அமைக்கப்பட்ட இச் செயலமர்வு மட்/ககு/வந்தாறுமூலை மத்திய வித்தியாயத்தில் நடைபெற்றது.
மட்டக்களப்பு பிரதேசத்தின் பிரபல வளவாளரான திரு.கே.ரிசீகரன் அவர்கள் மாணவர்களுக்கான வழிகாட்டல்களையும் பயிற்சிகளையும் வழங்கினார்.
பங்கெடுத்த மாணவர்களின் கற்றல் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், கடந்த கால வினா-விடை கையேடுகள் மற்றும் கற்றல் கோப்புகள் என்பன இதன்போது இலவசமாக வழங்கி வைக்கப்பட்டன.
இந் நிகழ்வில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வைத்தியர் இ.சிறிநாத், ஏறாவூர்பற்று பிரதேச சபை தவிசாளர் மு.முரளிதரன், ஏறாவூர்பற்று பிரதேச சபை உறுப்பினரும் பாராளுமன்ற உறுப்பினரின் பிரதான இணைப்பாளரும் தாயக ஊற்று அமைப்பின் உப தலைவருமான த.பிரபாகரன், ஏறாவூர்பற்று பிரதேச சபை உறுப்பினர் சி.வவானந்தன், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், வளவாளர்கள், தாயக ஊற்று அமைப்பு உறுப்பினர்கள், சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள், சிகண்டி அறக்கட்டளை அமைப்பு உறுப்பினர்கள், வந்தாறுமூலை மத்திய வித்தியாய பழைய மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.










