ஹஸ்பர் ஏ எச்
இலங்கையின் இளைஞர்களை தொழில்நுட்பம் சார்ந்த எதிர்காலத்திற்குத் தயார்படுத்தும் முக்கிய முயற்சியாக, ஹேமாஸ் ஹோல்டிங்ஸ் பிஎல்சியின் கல்வி சார்ந்த துணை நிறுவனமான அட்லஸ் அக்சிலியா (Atlas Axillia), கொழும்பு நாலந்தா கல்லூரியுடன் இணைந்து, அக்கல்லூரியின் புத்தாக்க மையத்தில் (Nalanda Innovation Center) புத்தாக்க ஆய்வுகூடமொன்றை (Tinkering Lab) அண்மையில் திறந்து வைத்துள்ளது.
இந்த முயற்சியானது அட்லஸ் அக்சிலியா மற்றும் நாலந்தா கல்லூரி ஆகியவற்றின் கூட்டிணைப்பில் முன்னெடுக்கப்படுவதுடன், இந்தியாவின் நிதி ஆயோக் (NITI Aayog) அமைப்பின் கீழ் இயங்கும் அடல் புத்தாக்கத் திட்டத்தின் (Atal Innovation Mission – AIM) தொழில்நுட்ப நிபுணத்துவ ஆதரவுடனும், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் அனுசரணையுடனும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
நாலந்தா கல்லூரியின் நூற்றாண்டு கட்டடத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஆய்வுகூடம், விஞ்ஞானம், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் (STEM) மற்றும் கலைத்துறை சார்ந்த செயன்முறை கற்றல்களை மாணவர்களுக்கு பாடசாலைச் சூழலிலேயே வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
விஞ்ஞானக் கோட்பாடுகளுடன் ஆக்கபூர்வமான சிந்தனை மற்றும் தொழில்முனைவோர் திறன்களை ஒருங்கிணைப்பதன் மூலம், பாடநூல் ரீதியான கோட்பாட்டு அறிவுக்கும் நடைமுறைப் பயன்பாட்டுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைப்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.
இதன் மூலம் ரோபோட்டிக்ஸ், செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் வடிவமைப்புச் சிந்தனை (Design Thinking) போன்ற துறைகளில் மாணவர்கள் பரிசோதனைகளை மேற்கொள்வதற்கும், நிஜ வாழ்க்கைப் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை உருவாக்குவதற்கும் தேவையான வளங்களுடன் கூடிய வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இந்தக் கூட்டிணைப்பு குறித்து மகிழ்ச்சி தெரிவித்த இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, கல்வி, விஞ்ஞானம் மற்றும் புத்தாக்கம் ஆகியவற்றின் ஊடாக இளைஞர்களை வலுவூட்டுவதற்கான இரு நாடுகளினதும் பொதுவான எதிர்பார்ப்பையும் அர்ப்பணிப்பையும் இந்த முயற்சி பிரதிபலிப்பதாகக் குறிப்பிட்டார்.
இந்தியாவின் அடல் புத்தாக்கத் திட்டம், அந்நாட்டின் ஆயிரக்கணக்கான பாடசாலைகளில் மாணவர்களிடையே ஆர்வம் மற்றும் ஆராய்ச்சி மனப்பான்மை கொண்ட புத்தாக்கக் கலாசாரத்தை உருவாக்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், நாலந்தா கல்லூரி மற்றும் அட்லஸ் நிறுவனத்துக்கு இடையிலான இந்தக் கூட்டிணைப்பின் மூலம், அடல் புத்தாக்கத் திட்டத்தின் தொழில்நுட்ப நிபுணத்துவம், விசேட பாடத்திட்டங்கள் மற்றும் பயிற்சி ஆதரவு ஆகியவற்றை இலங்கை இளம் திறமையாளர்களும் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
இந்த முயற்சியானது வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களின் ஆற்றலைப் பயன்படுத்தி புத்தாக்கங்களை உருவாக்கும் ஆற்றல்மிக்க இளம் தலைமுறையினரை உருவாக்கும் என நம்பிக்கை வெளியிட்டார்.
திறப்பு விழாவில் உரையாற்றிய ஹேமாஸ் ஹோல்டிங்ஸ் பிஎல்சியின் குழும பிரதம நிறைவேற்று அதிகாரி அசிஷ் சந்திரா, சிறுவர்களுக்கு அவர்களின் எதிர்காலத்தைத் தாங்களே வடிவமைப்பதற்கான கருவிகளையும் தன்னம்பிக்கையையும் வழங்குவதன் மூலமே உண்மையான வலுவூட்டல் ஆரம்பமாகின்றது எனத் தெரிவித்தார்.
பல தலைமுறைகளாக இலங்கைப் பாடசாலை மாணவர்களின் அடிப்படைக் கல்வி வளர்ச்சிக்கு அட்லஸ் அக்சிலியா பங்களித்து வருவதாகவும், அதன் அடுத்தகட்ட வளர்ச்சியாக இந்தப் புத்தாக்க ஆய்வுகூடம் அமைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மாணவர்கள் சுதந்திரமாகப் பரிசோதனைகளை மேற்கொள்வதற்கும், தமது எண்ணங்களை நடைமுறை மாதிரிகளாக உருவாக்குவதற்கும், தொழில்முனைவோர் மனப்பாங்கை வளர்த்துக்கொள்வதற்கும் இந்த முயற்சி வழிவகுக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.
நாலந்தா புத்தாக்க மையமானது, மாணவர்களின் ஆரம்பகட்ட சிந்தனையிலிருந்து ஒரு கருத்தை உருவாக்கி, அதனை மாதிரியாக வடிவமைத்து, இறுதியில் முழுமையான புத்தாக்கத் தீர்வாக முன்வைக்கும் வரையிலான அனைத்து கட்டங்களுக்கும் வழிகாட்டும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதில் சுயமாகப் புத்தாக்கங்களை உருவாக்கும் ஆய்வுகூடம் (DIY Innovation Lab), முப்பரிமாண அச்சிடல் (3D Printing) மற்றும் டிஜிட்டல் உற்பத்தி வசதிகளைக் கொண்ட நவீன தயாரிப்பு ஆய்வுகூடம், மேம்படுத்தப்பட்ட மற்றும் மெய்நிகர் யதார்த்தத் தொழில்நுட்பங்களுக்கான (AR/VR) தனிப்பிரிவுகள், கலைத்துறை மற்றும் விவசாயத் தொழில்நுட்பப் பிரிவுகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
நாலந்தா கல்லூரியின் பழைய மாணவரும், நாலந்தா கல்லூரி நூற்றாண்டு விழாக் குழுவின் பிரதிநிதியுமான மஹேல ஜயவர்தன கருத்துத் தெரிவிக்கையில், நாலந்தா கல்லூரி தனது கல்வி மற்றும் விளையாட்டுத்துறைச் சிறப்பின் நூற்றாண்டைக் கொண்டாடும் இத்தருணத்தில், அடுத்த நூற்றாண்டின் தேவைகளை நோக்கிச் சிந்திப்பது அனைவரினதும் பொறுப்பாகும் எனக் குறிப்பிட்டார்.
உலகம் முன்னெப்போதும் இல்லாத வேகத்தில் மாற்றமடைந்து வருவதால், மாணவர்கள் தகவமைத்துக்கொள்ளும் திறன், குழு ஒத்துழைப்பு மற்றும் ஆக்கபூர்வமான துணிச்சல் ஆகியவற்றுடன் கல்வியை நிறைவு செய்ய வேண்டியது அவசியம் எனவும் அவர் தெரிவித்தார்.
நாலந்தா புத்தாக்க மையத்தின் இந்த ஆய்வுகூடம், மாணவர்கள் துணிச்சலான புதிய சிந்தனைகளைப் பரிசோதிப்பதற்கும், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்திக் கற்றுக்கொள்வதற்கும், செயற்கை நுண்ணறிவு ஆதிக்கம் செலுத்தும் எதிர்கால உலகில் தலைமைத்துவப் பண்புகளை வளர்த்துக்கொள்வதற்கும் உலகத் தரத்திலான தளமொன்றை வழங்குவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கல்வி நிறுவனங்கள், தனியார் துறை நிறுவனங்கள் மற்றும் சர்வதேச அமைப்புகள் ஆகியவற்றுக்கு இடையிலான கூட்டிணைப்புகள் மூலம், நடைமுறை மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த கல்வியை மாணவர்களுக்கு பரந்த அளவில் பெற்றுக்கொடுக்க முடியும் என்பதற்கு நாலந்தா புத்தாக்க மையத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்தப் புத்தாக்க ஆய்வுகூடம் சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.






