அரசாங்கத்தின் தூய்மையான மற்றும் அழகான சூழலை உருவாக்கும் எண்ணக்கருவிற்கமைய ‘கிளீன் ஸ்ரீலங்கா’ தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் ‘அத்தம’ தேசிய தூய்மை தின வேலைத்திட்டத்தின் இரண்டாம் கட்டம் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதன் ஒரு பகுதியாக, ஆலையடிவேம்பு பிரதேச செயலகமும் ஆலையடிவேம்பு பிரதேச சபையும் இணைந்து இரண்டாம் கட்ட தூய்மைப்பணியை (19) சனிக்கிழமை முன்னெடுத்தன.
இதன்போது, ஆலையடிவேம்பு பிரதேச சபை எல்லைக்குட்பட்ட அக்கரைப்பற்று–சாகாம வீதி, வெள்ளப்பாதுகாப்பு வீதி சின்னமுகத்துவார கடற்கரை பிரதேசம் மற்றும் அரசையடி உள்ளிட்ட பகுதிகளில் சிரமதானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
இந்நிகழ்வில் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஆர். திரவியராஜ், பிரதேச சபைத் தலைவர் ஆ. தர்மதாச, உபதவிசாளர் க. ரகுபதி, தேசிய மக்கள் சக்தியின் இணைப்பாளர் பிரதேச சபை உறுப்பினர் ஆர். ரதீசன் ஆலையடிவேம்பு சுகாதார வைத்திய அதிகாரி திருமதி நக்பர் பாறுசா பிரதேச செயலக உதவித்திட்டமிடல் பணிப்பாளர் ஹூசைன்டீன் பிரதேச சபை செயலாளர் எஸ். திவாகரன், உள்ளிட்ட சபை உறுப்பினர்கள் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.
மேலும், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பொலிஸார் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள், கடற்படை உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோரும் இணைந்திருந்தனர்.





