• Home
  • ›
  • உள்ளூர் செய்திகள்
  • ›
  • அம்பாந்தோட்டையில் மகா சோகம்: பெற்றோர் கண் முன்னே ராட்சத அலையில் இழுத்துச் செல்லப்பட்ட 3 சிறுவர்கள் பலி!

அம்பாந்தோட்டையில் மகா சோகம்: பெற்றோர் கண் முன்னே ராட்சத அலையில் இழுத்துச் செல்லப்பட்ட 3 சிறுவர்கள் பலி!

வார இறுதி விடுமுறையைக் கழிப்பதற்காக பெற்றோருடன் மகிழ்ச்சியாக கடற்கரைக்குச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பிள்ளைகளுக்குக் காத்திருந்த விபரீதம், ஒட்டுமொத்த நாட்டையுமே உலுக்கியுள்ளது. அம்பாந்தோட்டை – ஹூங்கம, கலாமெட்டிய (Kalametiya) கடற்பகுதியில் நேற்று மாலை நீராடிக் கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சிறுவர்கள் ராட்சத அலையினால் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளனர்.

பெற்றோரின் கண் முன்னாலேயே திடீரென எழும்பிய பாரிய அலையொன்று, நொடிப் பொழுதில் இந்தச் சிறுவர்களைக் கடலுக்குள் இழுத்துச் சென்றுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடலில் மூழ்கி காணாமல் போனவர்களில் 12 மற்றும் 18 வயதுடைய அண்ணன், தம்பி ஆகிய இருவரின் சடலங்கள் இன்று காலை கடற்படையினரால் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளன.

அவர்களுடன் சென்ற உறவினரான 17 வயதுடைய மற்றுமொரு சிறுவனைத் தேடும் பணிகள் தற்போதும் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. தங்காலை பொலிஸ் உயிர்காப்புப் பிரிவு, இலங்கை கடற்படையினர் மற்றும் உள்ளூர் மீனவர்கள் ஒன்றிணைந்து அதிவேகப் படகுகள் மற்றும் ஹெலிகாப்டர்களின் உதவியுடன் கடலில் தீவிரமான தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

⚠️ கடற்படை மற்றும் பொலிஸாரின் அவசர எச்சரிக்கை! தற்போது நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் கடல் கொந்தளிப்பு காரணமாக, பொதுமக்கள் எவரும் கடலில் நீராட வேண்டாம் எனவும், கடற்கரைகளுக்குச் செல்வோர் மிகவும் அவதானமாக இருக்குமாறும் கடற்படையினரும் பொலிஸாரும் நாட்டு மக்களுக்கு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Share the Post: