எவ்வித சட்டபூர்வ அனுமதிப்பத்திரங்களும் இன்றி, வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட இரண்டு சொகுசு மோட்டார் சைக்கிள்களைத் தம்வசம் வைத்திருந்த சந்தேகநபர் ஒருவர் மத்திய குற்றப்புலனாய்வுப் பணியகத்தினால் (CCIB) அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று (16) அதிகாலை அத்துருகிரிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மில்லினியம் சிட்டி (Millennium City) வீட்டுத் தொகுதிப் பகுதியில், மத்திய குற்றப்புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழுவினர் முன்னெடுத்த விசேட சோதனையின் போதே இந்த சந்தேகநபர் வலையிலகப்பட்டுள்ளார்.
இதன்போது, எவ்வித இறக்குமதி ஆவணங்களும் இன்றி சட்டவிரோதமான முறையில் இலங்கைக்குள் கொண்டுவரப்பட்டு அசெம்பிள் செய்யப்பட்ட இரண்டு மோட்டார் சைக்கிள்களும் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டு பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.
இச்சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டவர் அத்துருகிரிய பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இவ்விடயம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மத்திய குற்றப்புலனாய்வுப் பணியகத்தினர் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.




