• Home
  • கல்வி
  • அகில இலங்கை தமிழ் மொழி தினப் போட்டியில் வரலாற்றுச் சாதனை படைத்த மடிகே முஸ்லிம் மகா வித்தியாலய மாணவர்களுக்கு கௌரவிப்பு

அகில இலங்கை தமிழ் மொழி தினப் போட்டியில் வரலாற்றுச் சாதனை படைத்த மடிகே முஸ்லிம் மகா வித்தியாலய மாணவர்களுக்கு கௌரவிப்பு

ஹஸ்பர் ஏ.எச்-

அகில இலங்கை தமிழ் மொழி தினப் போட்டி – 2026 இல் மடிகே முஸ்லிம் மகா வித்தியாலய மாணவர்கள் வரலாற்றுச் சாதனை படைத்ததை முன்னிட்டு அவர்களைப் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு (” 07) பாடசாலையின் பிரதான மண்டபத்தில் வெகுவிமரிசையாக நடைபெற்றது.

இவ்வாண்டு நடைபெற்ற அகில இலங்கை தமிழ் மொழி தினப் போட்டிகளில், மடிகே முஸ்லிம் மகா வித்தியாலய மாணவ, மாணவிகள் பங்கேற்ற 25 போட்டிகளில் 17 போட்டிகளில் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களைப் பெற்று பாடசாலைக்கும் பிரதேசத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர்.

இந்தச் சிறப்பான சாதனையைப் பாராட்டும் வகையில், Madige Edu Bridge பட்டதாரிகள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இக்கௌரவிப்பு நிகழ்வு, பாடசாலையின் கௌரவ அதிபர் அஹமட் லெப்பை அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

நிகழ்வின் போது சாதனை படைத்த மாணவர்களுக்கு நினைவுப் பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு அவர்களின் கல்வி மற்றும் இணைப்பாடச் செயற்பாடுகளுக்கான அர்ப்பணிப்பு பாராட்டப்பட்டது. மேலும், எதிர்காலத்திலும் இதுபோன்ற சாதனைகளை நோக்கி மாணவர்கள் தொடர்ந்து பயணிக்க வேண்டும் என்பதற்கான ஊக்கமும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் பாடசாலையின் அதிபர், ஆசிரியர்-ஆசிரியைகள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள், மாணவர் சங்க உறுப்பினர்கள், MEDA அமைப்பின் பிரதிநிதிகள், Madige Edu Bridge பட்டதாரிகள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் சங்க உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

இந்நிகழ்வு மாணவர்களின் கல்விச் சாதனைகளைப் பாராட்டுவதோடு மட்டுமல்லாமல், அவர்களை எதிர்கால வெற்றிப் பயணத்திற்கு ஊக்குவிக்கும் அர்த்தமுள்ள நிகழ்வாகவும் அமைந்தது.

Share the Post: