அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான 2026 ஆம் ஆண்டுக்கான ‘எல்.வி. ஜயவீர ஞாபகார்த்த கிண்ண’ (L.V. Jayaweera Trophy) குத்துச்சண்டை போட்டிகளில் பங்கேற்பதற்காக, கொட்டகலை கேம்பிரிட்ஜ் கல்லூரியின் (Cambridge College, Kotagala) குத்துச்சண்டை அணி தகுதிபெற்று களமிறங்கியுள்ளது.
இலங்கை பாடசாலைகள் குத்துச்சண்டை சங்கத்தினால் வருடாந்தம் நடாத்தப்படும் மிகவும் மதிப்புமிக்க இப்போட்டித் தொடரில், இம்முறை கொட்டகலை கேம்பிரிட்ஜ் கல்லூரியைப் பிரதிநிதித்துவப்படுத்தி 14 மாணவ வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இவர்களில் 10 ஆண் மாணவர்களும், 04 பெண் மாணவிகளும் அடங்குகின்றனர்.
மலையகப் பகுதியில் இருந்து குத்துச்சண்டை விளையாட்டில் மிகச் சிறந்த திறமைகளை வெளிப்படுத்தி வரும் இம்மாணவர்கள், தேசிய மட்டத்திலான இப்போட்டியில் கல்லூரிக்கு பெருமை சேர்க்கும் நோக்குடன் தீவிரப் பயிற்சிகளின் பின்னர் இம்முறை களமிறங்கியுள்ளனர்.
ஆண், பெண் இருபாலாரும் இம்முறை கொட்டகலை மண்ணில் இருந்து தேசிய மட்ட குத்துச்சண்டை வளையத்திற்குள் (Boxing Ring) கால்பதித்துள்ளமை, பிராந்திய விளையாட்டு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பையும் பாராட்டுக்களையும் தோற்றுவித்துள்ளது.







