திருகோணமலையில் ஆசிரியர்களுக்கான விசேட ஊடக விழிப்புணர்வு செயலமர்வு

தரமான ஊடக அறிவாற்றல் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பத் திறன் கொண்ட பாடசாலை சமூகத்தை உருவாக்கும் நோக்கில், அரசாங்க தகவல் திணைக்களத்தின் “மாகாண நிகழ்ச்சித்திட்டம் – 2026” இன் கீழ் திருகோணமலையில் விசேட விழிப்புணர்வு செயலமர்வொன்று வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

திருகோணமலை மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில், மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எம். ஹேமந்தகுமார தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது. இதில் மாவட்ட பாடசாலை ஊடகக் கழகங்களுக்குப் பொறுப்பான ஆசிரியர்கள் மற்றும் தொடர்பாடலும் ஊடகக் கற்கையும் பாட ஆசிரியர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

துறைசார் நிபுணர்களால் வழிநடத்தப்பட்ட இந்த செயலமர்வு மூன்று முக்கிய அமர்வுகளாக அமைந்திருந்தது:

  • போலித் தகவல் ஒழிப்பு மற்றும் டிஜிட்டல் பாதுகாப்பு: தகவல்களை விமர்சன ரீதியாக அணுகுதல், சமூக ஊடகப் பயன்பாட்டில் பொறுப்புணர்வு மற்றும் போலியான தகவல்களை அடையாளம் காணுதல் குறித்து கிழக்குப் பல்கலைக்கழக திருகோணமலை வளாகத்தின் சிரேஸ்ட விரிவுரையாளர் திருமதி சிவப்பிரியா ஸ்ரீராம் விரிவுரை ஆற்றினார்.
  • ஊடகக் கழகங்களின் பங்கு: மாணவர்களின் ஆளுமை, தலைமைத்துவ திறன் வளர்ச்சி மற்றும் ஊடகச் செயற்பாடுகளைத் திட்டமிடுதல் குறித்து அரசாங்க தகவல் திணைக்களத்தின் தகவல் உத்தியோகத்தர் எஸ்.எம். ரஸீன் விளக்கமளித்தார்.
  • கல்வித் துறையில் செயற்கை நுண்ணறிவு (AI): செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் அடிப்படைகள் மற்றும் கல்வித் துறையில் அதனை எவ்வாறு திறம்பட பயன்படுத்தலாம் என்பது குறித்து மாவட்ட செயலக முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் ஆர். சுபீட்சன் தெளிவுபடுத்தினார்.

மாணவர்களிடையே ஊடக அறிவாற்றல், விமர்சன சிந்தனை, டிஜிட்டல் பொறுப்புணர்வு மற்றும் நவீன தொழில்நுட்ப (AI) பயன்பாடுகளை மேம்படுத்துவதில் ஆசிரியர்களின் பங்களிப்பை வலுப்படுத்துவதே இந்த விழிப்புணர்வு செயலமர்வின் முக்கிய நோக்கமாகும்.

இந்நிகழ்வில் மாவட்ட மேலதிக செயலாளர் எஸ். சுதாகரன், மேலதிக மாவட்ட செயலாளர் (காணி) ஜெ. ஸ்ரீபதி உள்ளிட்ட பல உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

Share the Post: