• Home
  • ›
  • உள்ளூர் செய்திகள்
  • ›
  • வெருகல் வட்டவன் படுகொலையின் 41ஆம் ஆண்டு நினைவேந்தல்: “எப்போது கிடைக்கும் நீதி?” என உறவுகள் கண்ணீர் மல்கக் கேள்வி!

வெருகல் வட்டவன் படுகொலையின் 41ஆம் ஆண்டு நினைவேந்தல்: “எப்போது கிடைக்கும் நீதி?” என உறவுகள் கண்ணீர் மல்கக் கேள்வி!

திருகோணமலை மாவட்டத்தின் வெருகல் – வட்டவன் கிராமத்தில் கடந்த 1985ஆம் ஆண்டு அரங்கேற்றப்பட்ட கொடூர கூட்டுப் படுகொலையின் 41ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, இன்று (03) உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

படுகொலை செய்யப்பட்ட அப்பாவிப் பொதுமக்களின் நினைவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வில், உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மற்றும் பிரதேசவாசிகள் பெருந்திரளாகக் கலந்துகொண்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

கிராமங்கள் தீக்கிரையாக்கப்பட்ட கருப்பு நாள்!

உள்நாட்டுப் போர் தீவிரமடைந்திருந்த 1985ஆம் ஆண்டு ஜூன் மாதம் 3ஆம் திகதி, வெருகல் பிரதேசத்திற்குள் நுழைந்த ஆயுததாரிகள் வெறியாட்டத்தில் ஈடுபட்டனர். இதன் போது ஆரிப்பு, பூநகர், பூமரத்தடிச்சேனை, மாவடிச்சேனை, முத்துச்சேனை, வாழைத்தோட்டம் மற்றும் வட்டவன் உள்ளிட்ட பல தமிழ்க் கிராமங்கள் அடித்து நொறுக்கப்பட்டு, தீக்கிரையாக்கப்பட்டன.

ஆயுததாரிகளின் இந்தத் திடீர் தாக்குதலால் அதிர்ச்சியடைந்த மக்கள், தமது உயிரைக் காத்துக்கொள்வதற்காகக் கையில் கிடைத்த பொருட்களுடன் அடர்ந்த காடுகளுக்குள் சிதறி ஓடினர். எனினும், வட்டவன் கிராமத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சிலரால் அவ்வாறு தப்பிச் செல்ல முடியாமல் போனது.

கர்ப்பிணித் தாய், சிறுவர்கள் உட்பட 10 பேர் கொடூரமாகக் கொலை!

பாதுகாப்புத் தேடி அங்கிருந்த ஒரு வீட்டிற்குள் தஞ்சமடைந்திருந்த அப்பாவிப் பொதுமக்கள் மீது தாக்குதல்காரர்கள் தமது கொடூரத்தை ஏவினர். வீட்டிற்குள் புகுந்த அவர்கள், அங்கிருந்த கர்ப்பிணித் தாய் மற்றும் பச்சிளம் சிறுவர்கள் உட்பட 10 பேரை மிகக் கொடூரமான முறையில் வெட்டியும் சுட்டும் படுகொலை செய்தனர். அத்துடன் நில்லாது, படுகொலை செய்யப்பட்டவர்களின் உடல்களையும் அந்த வீட்டோடு சேர்த்து தீயிட்டுக் கொளுத்தி சாம்பலாக்கினர்.

இந்தக் கொடூர சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் விபரம்:

  • சுபத்திரை (கர்ப்பிணித் தாய்)
  • கார்த்திகேசு
  • கார்த்திகேசு கனகம்மா
  • ரங்கராசா அமராவதி
  • ரங்கராசா ராசா
  • ரங்கராசா சரஸ்வதி
  • கேதுபாலுப்பிள்ளை
  • அன்னக்கிளி
  • சின்னையா கிட்ணப்பிள்ளை
  • இராசையர் (ஓடாவியார்)

41 ஆண்டுகாலக் காத்திருப்பு: நீதிக்காக ஏங்கும் உறவுகள்!

இன்றைய நினைவேந்தல் நிகழ்வின் போது, படுகொலை செய்யப்பட்டவர்களின் உருவப்படங்களுக்குச் சுடரேற்றப்பட்டு, மலரஞ்சலி மற்றும் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

“எங்கள் கண்முன்னே எங்களது சொந்த பந்தங்களை, உறவுகளைப் பறிகொடுத்து இன்றுடன் 41 ஆண்டுகள் கடந்துவிட்டன. காலம் இவ்வளவு தூரம் நகர்ந்த போதிலும், இதுவரை எமக்கான நீதியோ அல்லது உண்மைகளோ கண்டறியப்படவில்லை. எஞ்சியிருக்கும் எங்களது வாழ்நாளுக்குள்ளாவது இந்த கொடூரத்திற்கு நீதி கிடைக்க வேண்டும்” என பாதிக்கப்பட்ட மக்கள் சர்வதேச சமூகத்திற்கும், அரசாங்கத்திற்கும் கண்ணீர் மல்கக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Share the Post:

Related Posts