ஹஸ்பர் ஏ.எச்-
இந்தியக் கடற்படையின் உள்நாட்டிலேயே கட்டமைக்கப்பட்ட பல்நோக்கு ஸ்டெல்த் போர்க்கப்பலான INS Udaygiri, மூன்று நாள் Operational Turnaround (OTR) விஜயத்தை மேற்கொள்வதற்காக 08 செப்டம்பர் 2026 அன்று கொழும்பை வந்தடைந்தது. இக்கப்பலின் விஜயம், இந்தியாவின் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்கள் இலங்கைக்கு மேற்கொள்ளும் முக்கியத்துவம் வாய்ந்த விஜயத்துடன் ஒருங்கிணைந்துள்ளது.
இவ்விஜயத்தின் நோக்கம், இலங்கை கடற்படையுடன் தொழில்நுட்பப் பயிற்சிகள் மற்றும் Mobile Training Team மூலம் அனுபவப் பகிர்வுகளை மேற்கொள்வதன் ஊடாக இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதாகும். மேலும், இலங்கை கடற்படை மற்றும் இலங்கை விமானப்படைக்குத் தேவையான அத்தியாவசிய இயந்திரங்கள்/உபகரணங்களுக்கான உதிரிப் பாகங்களையும் இக்கப்பல் கொண்டு வந்துள்ளது.
கப்பலின் கட்டளை அதிகாரியான கேப்டன் விகாஸ் சூட், இலங்கை கடற்படையின் மேற்கு கடற்படைப் பிராந்தியத் தளபதி ரியர் அட்மிரல் G.H.S.E. டி சில்வாவை உத்தியோகபூர்வமாகச் சந்திக்க உள்ளார். இந்தியாவின் பாதுகாப்புத்துறை அமைச்சரின் விஜயத்தின் ஒரு பகுதியாக, இலங்கைப் பிரமுகர்களை வரவேற்கும் வகையில் கப்பலில் வரவேற்பு நிகழ்வொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், கப்பல் பணியாளர்கள் இலங்கை கடற்படையினருடன் தொழில்சார் மற்றும் விளையாட்டு சார்ந்த பரஸ்பர நிகழ்வுகளில் பங்கேற்க உள்ளதுடன், ‘Clean Sri Lanka’ இயக்கத்திற்கு ஆதரவாக கொழும்பில் நடைபெறும் கடற்கரை சுத்தப்படுத்தும் நிகழ்ச்சியிலும் இலங்கை கடற்படையுடன் இணைந்து பங்கேற்க உள்ளனர்.
INS Udaygiri இதற்கு முன்னர் 2025 நவம்பர் மாதம் இந்தியக் கடற்படையின் விமானந்தாங்கிக் கப்பலான INS Vikrant உடன் இணைந்து கொழும்பிற்கு விஜயம் செய்து, SLN IFR-2025 நிகழ்வில் பங்கேற்றது. Cyclone Ditwah புயலின்போது மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரண (HADR) நடவடிக்கைகளிலும் இக்கப்பல் பங்கேற்று, உடனடி நிவாரணப் பொருட்களை வழங்கியது. இதன் மூலம், தனது மிக நெருங்கிய கடல்சார் அண்டை நாட்டிற்கு முதலாவது பதிலளிப்பாளராக இந்தியாவின் பங்களிப்பு மேலும் உறுதிப்படுத்தப்பட்டதுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவும் மேலும் வலுப்பெற்றது.
இலங்கைக்கான இந்தியக் கடற்படைக் கப்பல்களின் விஜயங்கள், ‘Mutual and Holistic Advancement for Security and Growth Across Regions (MAHASAGAR)’ என்ற தொலைநோக்குப் பார்வையையும், இந்தியாவின் ‘Neighbourhood First’ (அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை) கொள்கையையும் நடைமுறைப்படுத்துவதற்கான இந்தியாவின் அசைக்க முடியாத உறுதிப்பாட்டை வெளிப்படுத்துகின்றன.







