ஆர்ட்டெமிஸ் II விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது
அரை நூற்றாண்டு கால நீண்ட இடைவெளிக்குப் பிறகு, மீண்டும் மனிதர்களை நிலவுக்கு அழைத்துச் செல்லும் நாசாவின் (NASA) வரலாற்றுச் சிறப்புமிக்க ஆர்ட்டெமிஸ் II (Artemis II) விண்கலம் புளோரிடாவிலிருந்து வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
இலங்கை நேரப்படி புதன்கிழமை நள்ளிரவு (ஏப்ரல் 1) புளோரிடாவிலுள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து, பிரம்மாண்டமான SLS (Space Launch System) ரொக்கெட் மூலம் இந்த விண்கலம் ஏவப்பட்டது. சூரியன் மறையும் அந்தியில், விண்ணைப் பிளக்கும் ஒலியுடன் சீறிப்பாய்ந்த இந்த ரொக்கெட், வெண் மேகக் கூட்டங்களைக் கிழித்துக்கொண்டு நிலவை நோக்கி தனது பயணத்தை ஆரம்பித்தது.
இந்த 10 நாள் பயணத்தில் நான்கு விண்வெளி வீரர்கள் பயணிக்கின்றனர்:
மூன்று அமெரிக்க விண்வெளி வீரர்கள்.
ஒரு கனடிய விண்வெளி வீரர்.
இந்த விண்கலம் நிலவின் மேற்பரப்பில் தரையிறங்காது. மாறாக, நிலவைச் சுற்றிப் பயணம் செய்து மீண்டும் பூமிக்குத் திரும்பும். இது எதிர்வரும் ஆண்டுகளில் மனிதர்களை நிலவில் தரை இறக்குவதற்கான நாசாவின் திட்டத்திற்கு ஒரு முன்னோட்டமாகும். குறிப்பாக, சீனா தனது விண்வெளி வீரர்களை நிலவுக்கு அனுப்பும் முன்னரே, அமெரிக்கா மீண்டும் நிலவில் தடம் பதிக்க இந்தத் திட்டம் பெரும் மைல்கல்லாகக் கருதப்படுகிறது.
சுமார் 10 நாட்களுக்குப் பிறகு, இந்த விண்கலம் பசுபிக் சமுத்திரத்தில் பாதுகாப்பாகத் தரையிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.




