புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் கீழ் இயங்கும் தொல்லியல் திணைக்களத்தில் நாடு முழுவதிலும் உள்ள தொல்லியல் இடங்களில் நிலவும் ஆரம்ப நிலையின் (தேர்ச்சியற்ற) 515 பதவி வெற்றிடங்களை நிரப்புவதற்காக தகுதியான இலங்கை குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
திறந்த அடிப்படையில் தற்காலிக மற்றும் நிரந்தரப் பணிகளுக்காக இந்த ஆட்சேர்ப்பு நடத்தப்படுகிறது.
பதவி விபரங்கள் மற்றும் வெற்றிடங்கள்:
- தொல்லியல் உதவியாளர் (தரம் III) – 191 வெற்றிடங்கள்
- காவற்காரர் (தரம் III) – 324 வெற்றிடங்கள்
மொத்த வெற்றிடங்கள்: 515
தகைமைகள் மற்றும் நிபந்தனைகள்:
- கல்வித் தகைமை: கல்விப் பொதுத் தராதர பத்திர (சாதாரண தர) பரீட்சையில் இரண்டுக்கு மேற்படாத அமர்வுகளில், குறைந்தபட்சம் இரண்டு திறமைச் சித்திகள் (Credit Passes) உட்பட ஆறு (06) பாடங்களில் சித்தியடைந்திருத்தல் வேண்டும்.
- தொழில்சார் தகைமை & அனுபவம்: தொடர்புடைய துறையில் தொழில்சார் தகைமைகளோ அல்லது அனுபவமோ பெற்றிருப்பது விசேட தகைமையாகக் கருதப்பட்டு முன்னுரிமை அளிக்கப்படும்.
- உடற்தகுதி: இலங்கையின் எந்தவொரு பிரதேசத்திலும் சேவையாற்றுவதற்கும், பதவியின் கடமைகளை நிறைவேற்றுவதற்கும் போதுமான உடல் மற்றும் உள தகுதிகளைக் கொண்டிருக்க வேண்டும்.
- வயதெல்லை: விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதித் திகதியன்று விண்ணப்பதாரரின் வயது 18 வயதிற்கு குறையாமலும் 45 வயதிற்கு மேற்படாமலும் இருத்தல் வேண்டும்.
- ஏனையவை: * விண்ணப்பதாரர் கடந்த 05 வருடங்களாக சம்பந்தப்பட்ட மாகாணத்தினுள் நிரந்தர வசிப்பாளராக இருத்தல் வேண்டும் (இது கிராம உத்தியோகத்தர் சான்றிதழ் மூலம் உறுதி செய்யப்பட வேண்டும்).
- நன்னடத்தையுடையவராக இருத்தல் வேண்டும்.
சம்பள விபரம்:
அரசாங்க நிர்வாகச் சுற்றறிக்கை 10/2025 (PL-01-2025) இன் பிரகாரம், ஆரம்ப மாதாந்த சம்பள அளவு: ரூபா 40,000 – 10×450 – 10×490 – 10×540 – 12×590 – ரூபா 61,880.00 ஆகும்.
விண்ணப்பிக்கும் முறை:
இப்பதவிகளுக்கு ஆர்வம் காட்டும் தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் தொல்லியல் திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளமான www.archaeology.gov.lk இற்கு பிரவேசித்து மேலதிக தகவல்கள் மற்றும் மாதிரி விண்ணப்பப் படிவங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
- அனுப்பும் முறை: சரியாகப் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்கள் பதிவுத் தபால் (Registered Post) மூலமாக மட்டுமே அனுப்பப்பட வேண்டும்.
- கடித உறையின் மேல் இடது மூலையில்: “தொல்லியல் திணைக்களத்தின் ஆரம்ப நிலையின் (தேர்ச்சியற்ற) தொல்லியல் உதவியாளர் III / காவற்காரர் III பதவிகளுக்காக திறந்த அடிப்படையில் ஆட்சேர்த்தல்” எனத் தெளிவாகக் குறிப்பிடப்பட வேண்டும்.
- இறுதித் திகதி: பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 2026 ஜூலை 06 ஆம் திகதிக்கு முன்னர் கிடைக்கக்கூடியதாக அனுப்பி வைக்கப்பட வேண்டும்.
காலதாமதமாகி வரும் மற்றும் அரைகுறையாகப் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் எவ்வித அறிவித்தலுமின்றி நிராகரிக்கப்படும்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரிகள்:
- தொல்லியல் பணிப்பாளர் நாயகம், தொல்லியல் திணைக்களம், த.பெ. இல. 532, சேர் மார்க்ஸ் பர்னாந்து மாவத்தை, கொழும்பு 07.
- செயலாளர், புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு, இல. 135, அனகாரிக தர்மபால மாவத்தை, கொழும்பு 07.





