• Home
  • உலகச் செய்திகள்
  • உடன்படிக்கை எட்டப்படாவிட்டால் ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் தரைமட்டமாக்கப்படும் – டிரம்ப் எச்சரிக்கை!

உடன்படிக்கை எட்டப்படாவிட்டால் ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் தரைமட்டமாக்கப்படும் – டிரம்ப் எச்சரிக்கை!

whatsapp image 2026 04 02 at 12.16.01 (2)

போர் நிறுத்த உடன்படிக்கைக்கு ஈரான் இணங்காவிட்டால், அந்த நாட்டின் மின் உற்பத்தி நிலையங்கள் மீது மிகக் கடுமையான மற்றும் ஒரே நேரத்திலான தாக்குதல்கள் நடத்தப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வெள்ளை மாளிகையில் இருந்து நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரையின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். ஈரான் உடனான போரை முடிவுக்குக் கொண்டுவரும் ஒரு தீர்க்கமான கட்டத்தில் அமெரிக்கா உள்ளதாகக் குறிப்பிட்ட டிரம்ப், அடுத்த இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்குள் அமெரிக்காவின் இராணுவ இலக்குகள் எட்டப்படும் என்றும் உறுதியளித்தார்.

“ஒருவேளை இணக்கப்பாடு எட்டப்படாவிட்டால், ஈரானின் ஒவ்வொரு மின் உற்பத்தி நிலையத்தையும் நாம் மிகக் கடுமையாகத் தாக்குவோம். அவர்கள் மீண்டும் பழைய கற்காலத்திற்கே செல்ல நேரிடும்,” என அவர் மிக காட்டமாகத் தெரிவித்தார்.

தற்போது புதிய ஈரான் தலைமையுடன் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அவை ஓரளவு முன்னேற்றமடைந்துள்ளதாகவும் தெரிவித்த ஜனாதிபதி, ஹார்முஸ் நீரிணை (Strait of Hormuz) உடனடியாக வர்த்தக நடவடிக்கைகளுக்காகத் திறக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

ஈரானின் எண்ணெய் உட்கட்டமைப்புகளைத் தாக்கினால் அந்த நாடு மீண்டெழுவது கடினம் என்பதால், மனிதாபிமான அடிப்படையில் இதுவரை அமெரிக்கா அந்தத் தாக்குதலைத் தவிர்த்து வருவதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

Share the Post: