தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பொறுப்பேற்றுதன் பின்னர் அனுரகுமார திசாநாயக்க அவர்கள் ஜனாதிபதியாக பொறுப்பேற்றதன் பின்னர் ஒட்டுமொத்தமாக வடக்கு கிழக்கிலே கூடுதலான காணிகளை நாங்கள் விடுவித்து இருக்கின்றோம். வடக்கு கிழக்கில் குறிப்பாக யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மன்னார், போன்ற பல பிரதேசங்களிலும் இராணுவத்திடம் இருந்த காணிகள் அதேபோன்று மட்டக்களப்பிலும், அம்பாறையில், இருக்கின்ற காணிகளையும் தொடர்ச்சியாக நாம் விடுவித்து வருகின்றோம்.
என தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப் பற்றுப் பிரதேசத்தில் அமைந்துள்ள பாலையடிவட்டை இராணுவ முகாம் அமைந்துள்ள காணி விடுவிப்பது தொடர்பில் அப்பகுதிக்கு ஞாயிற்றுக்கிழமை (05.04.2026) விஜயம் செய்த அவர் அக்காணியை பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்…
மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பிரதேசத்தின் பாலையடிவட்டை கிராமத்தில் அமைந்திருந்த இராணுவ முகாமை பகுதியளவு விடுவிப்பதற்கு நாம் இதற்கு முன்னர் ஏற்பாடு செய்திருந்தோம். தொடர்ந்து எமக்கு மக்களின் கோரிக்கை வந்ததன் அடிப்படையில் அந்த இராணுவ முகாமை முழுவதுமாக விடுவிப்பதற்குரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் இந்த பாலையடிவட்டை இராணுவ முகாம் தொடர்பில் அந்த பிரதேச மக்கள் தொடர்ச்சியான அவர்களது கோரிக்கைகளை முன்வைத்து வந்திருந்தார்கள். இராணுவ முகாம் அமைந்திருக்கின்ற பிரதேசம் அப்பகுதி மக்களின் நடவடிக்கைகளுக்கு தேவைப்படுவதாக தொடர்ச்சியாக கோரிக்கை முன்வைக்கப்பட்டு வந்தன. அந்த வகையில் ஆளுங்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களும், அது போன்று எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களும், தொடர்ச்சியாக நாம் ஜனாதிபதியிடம் கோரிக்கை முன்வைத்ததன் அடிப்படையில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அவர்கள் தீர்மானம் ஒன்றை மேற்கொண்டு இருந்தார்.
அதேபோன்று பிரதி அமைச்சர் அவர்களும் இதற்கு என்னோடு அவரது ஆதரவையும் வழங்கியிருந்தார்.
இந்த அடிப்படையில் பாலையடிவட்டை இராணுவ முகாம் தற்போது முழுமையாக விடுவிப்பதற்குரிய ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றது. இந்த மாத இறுதிக்குள் இந்த முகாமை முற்று முழுதாக விடுவிப்பதற்கு அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்படும்.
தற்போது இராணுவத்தின் கைவசம் இருக்கின்ற இந்த காணியை போரதீவுப்பற்று பிரதேச செயலாளருக்கு முதற்கட்டமாக நாம் கையளிக்க தயாராக இருக்கின்றோம். இந்த காணி மத்திய நீர்ப்பாசன திணைக்களத்தின் காணியாக இருப்பதனால் அந்த திணைக்களம் கோரிக்கையை முன்வைக்கும்போது இக்காணியை நாம் அவர்களுக்கு வழங்குவதற்கு தயாராக இருக்கின்றோம்.
இந்தப் பிரதேசத்தில் நீர் தொடர்பான பிரச்சனைகள் தொடர்ச்சியாக இருந்து வருகின்றது. நீர்ப்பாசன தேவைகள் இருக்கின்றன. ஆகவே இந்த நீர்ப்பாசன திணைக்களத்துக்கு சொந்தமான காணியை அவர்களுக்கு விடுவித்து வழங்குவதற்குதானுபடாக அவர்களது செயற்பாடுகளை மிக மும்முரமாக செயற்படுத்துவதற்கு இலகுவாக அமையும் என நாம் எதிர்பார்க்கின்றோம்.
பிரதேசத்தில் ஏனைய அரச காணிகள் இராணுவத்தினரின் வசம் இருந்தால் அதனையும் நாம் விடுவிப்பதற்கு தயாராக இருக்கின்றோம்.
எமது தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பொறுப்பேற்றுதன் பின்னர் அனுரகுமார திசாநாயக்க அவர்கள் ஜனாதிபதியாக பொறுப்பேற்றதன் பின்னர் ஒட்டுமொத்தமாக வடக்கு கிழக்கிலே கூடுதலான காணிகளை நாங்கள் விடுவித்து இருக்கின்றோம். வடக்கு கிழக்கில் குறிப்பாக யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மன்னார், போன்ற பல பிரதேசங்களிலும் இராணுவத்திடம் இருந்த காணிகள் அதேபோன்று மட்டக்களப்பிலும், அம்பாறையில், இருக்கின்ற காணிகளையும் தொடர்ச்சியாக நாம் விடுவித்து வருகின்றோம்.
இந்த விடையத்திலே தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மக்கள் நலனை கருத்தில் கொண்டு அனைத்து விடயங்களையும் முன்னெடுத்து வருகின்றது என்பதை நாம் விசேடமாக தெரிவித்துக் கொள்கின்றேன். என அவர் இதன்போது தெரிவித்தார்.




